மின்னணு ஏல மையம் திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
சேலம் மாவட்டம், சேகோசர்வ் வளாகத்தில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னணு ஏல மையம் மற்றும் ரூ.33.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நேரடி விற்பனை முனையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேகோ ஆலையின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.
சேலம் மாவட்டம், சேலம் ஸ்டார்ச் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழிற் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (சேகோசர்வ்) வளாகத்தில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னணு ஏல மையம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க திட்டத்தின் கீழ் 33 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஜவ்வரிசியின் ஊட்டச்சத்து மதிப்பு, பயன்கள் மற்றும் விற்பனையை மேம்படுத்த புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி விற்பனை முனையக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.9.2021) திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், முதலமைச்சர் அவர்கள் பேசியதாவது:
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
மரவள்ளிக் கிழங்கு விவசாயம், ஜவ்வரிசி உற்பத்தி, ஸ்டார்ச் உற்பத்தி ஆகிய துறைகளின் மூலமாக, தொழில் துறையை பலப்படுத்தி வருகிற உங்கள் அனைவருக்கும் முதலில் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்ததற்குப் பிறகு கடந்த நான்கு மாதங்களில் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தேர்தலுக்கு முன்பு மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டபோது நாங்கள் வாக்குறுதி கொடுத்தோம், தேர்தல் அறிக்கையாக அச்சிட்டு அதை புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம்.
500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம். அதில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்திருக்கிறோம் என்பதை பெருமையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
மக்களோடு கருத்தைக் கேட்டு, மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து அதற்கேற்ற வகையில் இன்றைக்கு நடைபெறக்கூடிய ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும். நம்முடைய மிகமிக முக்கியமான கொள்கையாக சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்ற அந்தக் கொள்கையை இன்றைக்கு நாங்கள் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லவேண்டுமென்றால், இதுவரைக்கும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரு வரலாற்றுச் ஒரு தனி பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அதையும் வெளியிட்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதை வெளியிட்டபோது கூட, ஏதோ தன்னிச்சையாக நானோ அல்லது அமைச்சர்களோ அல்லது அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளோ மட்டும் கலந்துபேசி, முடிவெடுத்து அந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை. உள்ளபடியே உணர்வுகளைப் புரிந்து அந்த அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து முதல் கட்டமாக அந்தத் துறையின் அமைச்சரும் அல்லது அந்தத் துறையிலிருக்கும் அதிகாரிகளும் மாவட்டம், மாவட்டமாகச் சென்று அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களை, பிரதிநிதிகளை, நிர்வாகிகளை, அந்தச் சங்கங்களைச் சார்ந்திருக்கக்கூடிய தோழர்களையெல்லாம் ஒன்றுகூட்டி, அவர்களோடு கலந்துபேசி, அவர்களுடைய கோரிக்கைகளையெல்லாம் கேட்டு, அதற்குப் பிறகுதான், சென்னையில் அவர்களை அழைத்துப் பேசி முடிவெடுத்து அதற்குப் பிறகுதான் அந்த பட்ஜெட்டை தயாரித்து சட்டமன்றத்தில் தாக்கல் செய்தோம்.
இப்போது உங்களுடைய எண்ணங்களை உங்களுடைய கோரிக்கைகளை கேட்பதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். கேட்பது மட்டுமல்ல, அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காகவும் உறுதி எடுத்துக்கொள்ளக்கூடிய நிலையில்தான் நான் வந்திருக்கிறேன்.
ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையை ஏற்று புதிய சேமிப்புக் கிடங்குகள் அமைப்படும் என்று சட்டமன்றத்தில் நாம் ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். ஜவ்வரிசி உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கிறீர்கள், அதையும் தாண்டி, கலப்படத்தை தடுக்க, கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் அது தரப்பட வேண்டும் எனவும் அப்படியென்றும் சொல்லியிருக்கிறோம். இந்தக் கோரிக்கைகளையெல்லாம் நிச்சயமாக படிப்படியாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து இந்த நான்கு மாதங்களில் தொழில் துறை இன்றைக்கு எந்தளவுக்கு புத்துணர்வு அடைந்திருக்கிறது என்று நீங்கள் நன்றாக உணர்ந்திருப்பீர்கள். அதில் குறிப்பாக இரண்டு முக்கிய மாநாடுகளை நாம் நடத்தினோம். முதலீட்டாளர்கள் முதல் முகவரி மாநாடு சென்னையில் நடத்தி அதில் தொழில் துறையின் முன்னணியினர் எல்லாம் அதில் கலந்துகொண்டு, அதை சிறப்பித்திருக்கிறார்கள். தெற்கு ஆசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவதுதான் என்னுடைய லட்சியம் என்று அந்த மாநாட்டில் நான் உறுதியாகச் சொன்னேன். அதற்காக தொழில் புரிவதை சிறிது எளிமையாக்கி ஒற்றை சாளர முறை ஆரம்பித்து, இணையதளம் 2.0-வை நான் அன்றைக்கு தொடங்கி வைத்தேன்.
புதிய தொழில்களை தமிழ்நாட்டை நோக்கி இழுக்க வேண்டுமென்றால், உட்கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக நாம் அமைத்தாக வேண்டும். அதற்கான பணிகளையெல்லாம் நாங்கள் தொடங்கியிருக்கிறோம். அந்த மாநாட்டில்தான் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு 35 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டிருக்கிறோம். அதன்மூலமாக 17,141 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டுமென்றால், இதன்மூலமாக 55,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையையும் ஏற்படுத்தப் போகிறோம்.
அதற்கடுத்து, "ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு" என்று அந்த மாநாட்டிற்கு தலைப்பு வைத்து அடுத்த மாநாட்டை நடத்தினோம். அந்த மாநாட்டின் மூலமாக, 2,180 கோடி ரூபாய் மதிப்பிலான 25 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக 42 ஆயிரத்து 145 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இப்படி பல்வேறு நிறுவனங்களை நாம் தொடங்கவிருக்கிறோம்.
1.93 இலட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், இந்தியாவிலேயே, தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கிக் கொண்டிக்கிறது. இதை மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு கொண்டு வருவது தான் இந்த ஆட்சியின் லட்சியமாக அமைந்திருக்கிறது.
அதற்காக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை வெளியிட்டிருக்கிறோம். மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனக் கையேட்டையும் வெளியிட்டிருக்கிறோம்.
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?
திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை மற்றும் ஓசூர் ஆகிய பத்து ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படவிருக்கின்றன.
இதுபோன்ற ஏராளமான புதிய முன்னெடுப்புகளை அறிவித்திருக்கிறோம். தமிழ்நாட்டில் உற்பத்தியாகக்கூடிய பொருள்களும் அதிகமாக வேண்டும். அதேபோல, ஏற்றுமதி ஆகக்கூடிய பொருள்களும் அதிகமாக வேண்டும். அதற்கான அனைத்துத் திட்டமிடுதல்களையும் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது.
நகரம் - கிராமம் என்கிற வேறுபாடு, பாகுபாடு இல்லாமல் , அந்த மாவட்டம் - இந்த மாவட்டம் என்று வேற்றுமை இல்லாமல், அந்தத் தொழில் - இந்தத் தொழில் என்று பாகுபாடு காட்டாமல் - பெருந்தொழில் - சிறு தொழில் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் தமிழ்நாடு அரசு தன்னுடைய தொழில் கொள்கையை வகுத்து வைத்திருக்கிறது.
தொழில் அதிபர்களும் எந்த பேதமும் வேற்றுமையும் பார்க்காமல் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
ஜவ்வரிசி தொழிலைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே முன்னோடியாக விளங்கக்கூடிய சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தவேண்டும் என்பதுதான் நம்முடைய அரசினுடைய குறிக்கோள். இதை நிறைவேற்றுவதற்கு மரவள்ளி உழவர்களும், ஜவ்வரிசி தொழிற்சாலைகளும் இணைந்து செயல்பட்டால்தான் முடியும். இதற்கான முயற்சிகளுக்கு நிச்சயமாக, உறுதியாக சொல்கிறேன், எனது அரசல்ல என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இது நமது அரசு. எனவே, உங்களுடைய முயற்சிக்கு நம்முடைய அரசு முழு அளவிற்கு ஒத்துழைப்பு தரும் என்ற அந்த உறுதியை மட்டும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்துகொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில், ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் பொன். கௌதம் சிகாமணி, எஸ்.ஆர். பார்த்திபன், ஏ.கே.பி. சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண்ராய், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. கார்மேகம், சேகோசர்வ் மேலாண்மை இயக்குநர் ஜெ.இ. பத்மஜா, மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments