மாநிலங்களவை தேர்தல் - திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கான மாநிலங்களவை (ராஜ்யசபா எம்.பி.) தேர்தலில் திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்.பி.யாக இருந்த முகம்மது ஜான் மறைவால் காலியான ராஜ்யசபா இடத்துக்கு புதுக்கோட்டை அப்துல்லாவை வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். அப்துல்லாவை எதிர்த்து அதிமுக வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யானார் புதுக்கோட்டை அப்துல்லா.
அதேபோல் அதிமுக எம்.பி.க்களாக இருந்த வைத்திலிங்கம், முனுசாமி இருவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாகினர். இதனையடுத்து இருவரும் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் மேலும் 2 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் காலியாகின.
இந்த 2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்டோபர் 4-ல் இடைத் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த 2 இடங்களுக்கான திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி. நாமக்கல் ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
டாக்டர் கனிமொழி
திமுகவை உருவாக்கிய நிறுவன தலைவர்களில் என்.வி.நடராசனும் ஒருவர். சென்னை மாவட்ட திமுகவின் முதலாவது செயலாளராக இருந்தவர். திமுகவின் சட்ட திருத்தக் குழுவுக்கும் முதல் செயலாளர் என்.வி.நடராசன். திமுகவின் முதல் அமைப்புச் செயலாளரும் அவர்தான். திமுகவில் நீண்டகாலமாக தலைமை நிலையச் செயலாளராகவும் பணியாற்றியவர். இவரது மகன் என்.வி.என். சோமு, மத்திய அமைச்சராக பணிபுரிந்தவர். என்.வி.என்.சோமுவின் மகள்தான் டாக்டர் கனிமொழி.
2016 சட்டசபை தேர்தலில் தியாகராயர் நகர் தொகுதியில் டாக்டர் கனிமொழி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் பெரம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்தார். அவருக்குத்தான் சீட் கிடைக்கும் என்ற நிலையில் கடைசி நிமிடத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனது அப்போது பேசுபொருளாக இருந்தது. திமுகவின் மருத்துவர் அணி செயலாளராக இருக்கும் கனிமொழிக்கு தற்போது ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது. அவரது நீண்டகால எதிர்ப்பு நிறைவேறி இருக்கிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்
மற்றொரு வேட்பாளராக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவராக இருந்த நாமக்கல் கே.ராமசாமியின் பேரன்தான் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார். திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கு மிக நெருக்கமான குடும்பம்.
அத்துடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மனைவி நாமக்கல் சுற்றுவட்டார கோவில்களுக்கு வந்தால் அவருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருபவரும் ராஜேஷ்குமார்தான். இந்த செல்வாக்கால்தான் மிகவும் இளவயதிலேயே நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி கிடைத்தது. தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுகவின் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனையடுத்து ராஜ்யசபாவில் திமுகவின் பலம் 10 ஆக உயர உள்ளது.
'கழகத் தலைவர் @mkstalin அவர்கள், @DrKanimozhiSomu மற்றும் திரு. @krnrajeshkumar ஆகியோர், கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு'#DMK #CMMKStalin pic.twitter.com/9d93Yu52Tf
— DMK (@arivalayam) September 14, 2021
No comments
Thank you for your comments