நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்.. அமைச்சர்கள் நேரில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
திருவள்ளுர்:
திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள, மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை முன்னிட்டு, இன்று (11.09.2021) திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, ஜே.பி.எஸ்டேட், செல்லியம்மன் கோயில் தெரு மற்றும் பட்டாபிராம், பீமாராவ் நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் நேரில் சென்று, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான தடுப்பூசி சீட்டுகளை வழங்கி, தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான தடுப்பூசி சீட்டுகளை வழங்கி, தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளால் இந்திய அளவில் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பெருமளவு குறைந்துள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்து, சற்று படிப்படியாக குறைந்துள்ளது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், முன்கள பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டதால் தற்பொழுது மாவட்டத்தில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுகிறது.
தொற்று ஏற்பட்டவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப தேவையான மருத்துவ உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றவாது அலை ஆரம்பத்திலேயே தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால் எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக திருவள்ளுர் மாவட்டத்தில் செப்டம்பர் 3-ம் தேதி 50,000-ம் நபர்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 58,141 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.
மாவட்டத்தில் தற்பொழுது தடுப்பூசி செலுத்தும் வயது உடையவர்கள் சுமார் 19 இலட்சம் நபர்கள் ஆகும். இதில் ஏற்கனவே 9.14 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு தங்கள் பகுதியிலேயே தடுப்பூசி செலுத்துவதற்காக மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை (12.09.2021) நடைபெறவுள்ளது.
எனவே, தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களின் வீடுகளுக்கு நேடியாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான தடுப்பூசி சீட்டுக்களை வழங்கி வருகிறோம்.
நாளை 12.09.2021 அன்று திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் 1000 முகாம்கள் வாயிலாக 4000 மருத்துவம் மற்றும் முன்கள பணியாளர்கள் மூலம் ஒரு இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து பொதுமக்களும் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு திருவள்ளுர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத முதன்மை மாவட்டமாக திகழ ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மருசெந்தில்குமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் திரு.சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments