Breaking News

மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

சென்னை

  

 

மாநிலங்களவை உறுப்பினர் தோ்தலில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா்கள் டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு, கே.ஆா்.என். ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வானதாக சட்டப் பேரவைச் செயலாளரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி. சீனிவாசன் இன்று (27-9-2021) அறிவித்துள்ளார்.  வெற்றிபெற்ற இருவரும் தேர்தல் அதிகாரியிடம் வெற்றி சான்றிதழ் பெற்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 2 மாநிலங்களவை உறுப்பினா் இடங்கள் காலியாக உள்ளன.  அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆர்.  வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி ஆகியோர் கடந்த மே 7-ஆம் தேதி தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். அதில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022ம் ஆண்டு ஜூனிலும், கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதியும் நிறைவடைகிறது.

இந்த காலியிடங்களுக்கு கடந்த 15-ஆம் தேதியன்று தோ்தல் அறிவிக்கப்பட்டது. 

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட திமுக சார்பில் 2 போ் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.  மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் என்.வி.என்.சோமுவின் மகள் கனிமொழி,  நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என். ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.

சட்டப் பேரவைச் செயலாளரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி. சீனிவாசனிடம் முதலில் கனிமொழியும், ராஜேஷ்குமாரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

மனுக்களைத் திரும்பப் பெற செப்டம்பா் 27 கடைசியாகும்.  இதுவரை வேறு யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவில்லை. 

இந்நிலையில், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதாக தேர்தல் அதிகாரி கி. சீனிவாசன் இன்று அறிவித்தார்.

அறிவிப்பில் தெரிவித்ததாவது, 

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கே.பி. முனுசாமி மற்றும் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு தனித்தனியாக நடைபெற்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த கீழ்க்காணும் வேட்பாளர்கள் முறையே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

     1. டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு

     2. கே.ஆர்.என். ராஜேஷ்குமார்

திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதாக தேர்தல் அதிகாரி கி. சீனிவாசன் இன்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் திமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

2022ஆம் ஆண்டுடன் பதவிக்காலம் முடிவடையவுள்ள உறுப்பினர் ஆர். வைத்தியலிங்கம் இடத்தில் கே.ஆா்.என். ராஜேஷ்குமாரும்,

2026ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள கே.பி. முனுசாமி இடத்தில் டாக்டர் கனிமொழியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments