Breaking News

புரட்டாசி மாத பூஜை முன்னிட்டு... சபரிமலையில் தரிசனம் செய்ய தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு

திருவனந்தபுரம் :   

புரட்டாசி மாத பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16ம் தேதி திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது.


புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 21ம் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும்.

இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும் தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதையொட்டி, சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

நிலக்கல்லில் இதுதொடர்பான ஆய்வு நடைபெறும். 17ம் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

No comments

Thank you for your comments