Breaking News

அமைச்சர் மனோ தங்கராஜ் வெளிநாட்டு பிரநிதிகளுடன் காற்றாலைகளில் ஆய்வு...

குமரி:

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுற்று வட்டார பகுதிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளிநாட்டு பிரநிதிகளுடன் காற்றாலைகளில் ஆய்வு செய்தார்.காற்றாலை மின்சாரத்தை மேம்படுத்த நடவடிக்கை...

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட குமாரபுரம் பகுதியில் அமைந்துள்ள காற்றாலை பகுதிகளை,  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில்,

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பாதுகாத்து, பராமரித்து, நமது மாவட்டத்தை பசுமை மாவட்டமாக உருவாக்குகின்ற முழு முயற்சியில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே இயற்கையான சூழலில் காற்றாலைகள் மூலமாக சூரிய மின்சக்தியுடன் அதிகமான மின்சாரம் தயாரிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இங்கே இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான காற்றாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கும், அதேபோல் புதிய காற்றாலைகளை நிறுவுவது குறித்தும் தகுதியான வல்லுநர்கள் குழுவினரை கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதற்காக பாண்டிச்சேரியை தலைமையிடமாக கொண்டு இயங்கக்கூடிய ஆரோவில் நிறுவனம் வாயிலாக ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கென தனித்துவம் கொண்ட வளர்ச்சித்திட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நமது மாவட்டத்திற்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு துறைகளும் உதாசினமாக நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, காற்றாலை தொடர்பான பிரச்சனை குறித்து தெரிவித்தபோது, அப்போதைய அரசு இதை பற்றி சிந்திக்கவில்லை. 

தற்போது அந்த நிலையை மாற்றி, காற்றாலை வாயிலாக உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை முறையாக பயன்படுத்தி, தமிழக மின்சார வாரியத்திற்கு வழங்குவது குறித்து நன்கு ஆராய்ந்து,  தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கும்,  மின்சாரத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டுசென்று, காற்றாலை உற்பத்தி நவீன யுக்தியுடன் பெருக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காற்றாலையின் வாயிலாக அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தினை தமிழக அரசின் உதவிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசனை மற்றும் உதவிகளுடன் பணியினை மேற்கொள்ள இருக்கிறோம். வரும் காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக காற்றாலை உற்பத்திக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


மேலும்,  தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு நமது அரசு என்று அனைவரும் எண்ணக்கூடிய வகையில் அனைத்துத்தரப்பினர்களும் எதிர்பார்க்கின்ற திட்டங்கள், வளர்ச்சிகள் உள்ளிட்டவைகளை நிறைவேற்றும் அரசாகவும் என்றென்றும் திகழும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, ஜோதிநாத், மணிகண்டன், ஆலோசகர்கள் கிருஷ்ணமூர்த்தி, மார்டின் ஸ்டெஸ்லர், தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், தாணு ,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

No comments

Thank you for your comments