நெல் விற்பனைக்கு விவசாயிகள் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்
சென்னை:
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குறுவை, சம்பா அறுவடை காலங்களில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் தங்களது விவரங்களை e-DPC இணையத்தில் முன்கூட்டியே பதிவேற்றி, காலதாமதத்தை தவிர்த்து பயன் பெறுமாறு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் அரசாணை நிலை எண் 60, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள் 16.07.2021-ல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் எதிர் வரும் கொள்முதல் பருவம் 2021-2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் http://www.tncsc.tn.gov.in/ மற்றும் https://www.tncsc-edpc.in/Account/Login ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணையவழியின் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது அலைபேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர் / மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். அறிவித்துள்ளது.
No comments
Thank you for your comments