Breaking News

களையிழந்து போனது விநாயகர் சதுர்த்தி வழிபாடு...

 காஞ்சிபுரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலையிலேயே விநாயகர் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்லும் காஞ்சிபுரம் பக்தர்கள்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. முக்கிய கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகளால் களையிழந்து போனது விநாயகர் சதுர்த்தி வழிபாடு.

விநாயகர் சதுர்த்தி விழாவை  கொண்டாடிட மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.  பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் தமிழக அரசு தடை விதித்து உள்ளது.



இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்களில் ஒன்றான திருக்கச்சி நம்பி விநாயகர் ஆலயத்தில் அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் மலர் மாலைகள் அணிவித்து பக்தர்களின் தரிசனத்திற்கு திறந்துவைக்கப்பட்டது.

கொரோனா வழிபாட்டு நெறி முறைகளை கடைபிடித்து பக்தர்கள் திருக்கச்சிநம்பி விநாயகரை வழிபட்டு சென்றனர்.

காஞ்சிபுரத்தில் மற்றுமொரு முக்கிய கோவிலாக விளங்கும் காமாட்சி அம்மன் ஆலயம் அருகில் உள்ள  ஏலேலோ சிங்க விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும்.

விழாவின் போது பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.


இந்நிலையில் கொரானா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக 2-வது ஆண்டாக ரூபாய் நோட்டுகள் அலங்காரம் செய்யப்படாமல், வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரசித்திபெற்ற சங்குபாணி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளில் கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் வெளியிலேயே அகல் விளக்கை ஏற்றி வைத்து  ஏமாற்றத்துடன் வழிபட்டுச் சென்றனர்.

No comments

Thank you for your comments