நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
புதுடெல்லி
டெல்லி வந்தடைந்த பிரதமர் மோடியை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மோடியை வரவேற்றனர்.
ஐ.நா. பொதுசபை கூட்டம் மற்றும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 22-ம் தேதி காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
முதலில் வாஷிங்டன் சென்ற மோடி முதலில் அங்குள்ள 5 முன்னணி தொழில் அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர், ஜப்பான் பிரதமர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நேற்று முன் தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல் முறையாக மோடி வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோருடன் மோடி கலந்து கொண்டார்.
முக்கிய நிகழ்வாக, ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் நேற்று உரையாற்றினார் மோடி. அப்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவல், பருவ நிலை மாற்றம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை குறித்து அவர் பேசினார்.
ஐ.நா. பொதுசபை கூட்டம் முடிந்த பிறகு நியூயார்க்கில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மோடியை வரவேற்றனர். அப்போது அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே செண்டை மேளம் முழங்க கலைநிகழ்ச்சிகளுடன் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பலர் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments