Breaking News

லத்தேரியில் நூறு நாள் வேலையில் ஊழல்? ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயுமா?

வேலூர், செப்.13-

கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட லத்தேரியில் நூறு நாள் வேலையில் ஈடுபட்டதாக தொழிலாளர்கள் வங்கி கணக்கில் தலா ரூ.1000 செலுத்தி விட்டு திரும்பவும் தலா ரூ.800ஐ திரும்பத் தருமாறு ஒப்பந்ததாரர் மிரட்டுவதாகவும், நச்சரிப்பதாகவும் தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள 10வது கி.மீ.,ரில் உள்ளது லத்தேரி. கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்டது இந்த லத்தேரி கிராமம். இங்கு காட்பாடி சாலையில் அருந்ததியர் காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லத்தேரி பஞ்சாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக அருந்ததியர் காலனி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய் கட்டி முடிக்கப்பட்டும் அதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மட்டும் இன்றளவும் தூர்க்கப்படவில்லை. அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை கே.வி.குப்பம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பிடிஓ, ஏபிடிஓக்கள் கண்டும் காணாமல் அப்படியே விட்டு விட்டனர். இந்த தொகுதி தற்போதும் (கே.வி.குப்பம்) அதிமுக தொகுதியாக உள்ளது. எம்எல்ஏவாக ஜெகன் மூர்த்தியார் உள்ளார். இந்த பணியை அதிமுக கிளைச் செயலாளர் ஒருவர் எடுத்துள்ளார்.

அந்த அதிமுக ஒப்பந்ததாரர் அருந்ததியர் சமூகத்தினரை மனிதர்களாகவே மதிக்கவில்லை. கால்நடைகளை காட்டிலும் மிகவும் கேவலமாக நடத்துவதாக கடும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எப்போது கேட்டாலும் அதோ, இதோ என்று சாக்குபோக்கு சொல்லி வருகிறாராம் அந்த அப்பாடக்கர் ஆசாமி. தண்ணீர் முழுவதும் வற்றியதும் அந்த பள்ளத்தை மூடுவதாக கூறுகிறாராம். ஆனால் மூடிய பாடே இல்லை. இருக்கும் தண்ணீரை மின் மோட்டார் உதவியுடன் அப்புறப்படுத்தி விட்டு அந்த பள்ளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லையாம். 

இந்த பணிகளை நூறு நாள் வேலை திட்டம் மூலமாக செய்ததாக சொல்லி ஒரு தொழிலாளிக்கு தலா ரூ.1000 வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அந்த ஒப்பந்ததாரரோ அனைத்து நூறு நாள் பணியாளர்களையும் சந்தித்து நீ ரூ.200 எடுத்து கொள், எனக்கு தலா ரூ.800ஐ திருப்பித் தந்து விட வேண்டும் என்று மிரட்டல் விடுத்தும், நச்சரித்தும் வருகிறாராம். இதுகுறித்த புகார்கள் எழுதப்படிக்க தெரியாத கும்பல் பிடிஓ அலுவலகத்துக்கு மட்டும் தெரிவித்துள்ளளர். அவர்களும் அந்த புகாரை காற்றிலே பறக்க விட்டு விட்டு அவர்கள் வேலையை பார்க்கத் தொடங்கி விட்டனர். இதனால் செய்வதறியாது அருந்ததியர்கள் திகைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது.

அருந்ததியர்கள் காலனி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெகா சைஸ் பள்ளத்தின் அருகே இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற ரீதியில் பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இதை யாரும் இன்று வரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் பணியாற்றுவோர் ஏதோ கடமைக்கு பணியாற்றுவது போல் உள்ளது. வாங்கும் ஊதியத்துக்கு மனதார பணியாற்றுவது இல்லை. 

பக்கத்தில் உள்ள ஓடைக்கு இந்த தண்ணீரை திருப்பி விடாமல் காலம் கடத்தி வருகின்றார் ஒப்பந்ததாரர். அவர் மீது இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது கே.வி.குப்பம் பிடிஓ அலுவலக சிதம்பர ரகசியமாக உள்ளது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். இங்கு பாதாளத்தை தாண்டி பாய்ந்து விட்டது போலும். அதனால்தான் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களுக்காக அரசா? அரசுக்காக மக்களா? என்ற ரீதியில் கேள்வி எழுந்துள்ளது. 

லத்தேரி என்ன வேறு மாநிலத்தில், வேறு வட்டத்தில் உள்ளதா என்ற சந்தேகம் இன்று பலருக்கும் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ராஜேந்திரன் இந்த தேங்கும் தண்ணீரை தேங்க விடக்கூடாது என்று சொல்லி விட்டு அந்த தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு சென்றார். ஆனால் அவரது உத்தரவையும் கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் உள்ளவர்கள் காற்றிலே பறக்கவிட்டு விட்டுள்ளனர். இப்போது வரை அப்படியே உள்ளது குறிப்பிடத்தக்கது. கடலில் அலை ஓய்வது எப்போது? எப்போது மீன் பிடிப்பது என்பார்கள்.

அதுபோன்று தண்ணீர் வற்றட்டும் பின்னர் அகற்றுகிறேன் என்று கதை சொல்கிறார் ஒப்பந்ததாரர். இதை கேட்டுக் கொண்டு அமைதி காக்கின்றனர் பிடிஓ அலுவலக அலுவலர்கள். ஒப்பந்ததாரரால் பிடிஓ அலுவலகத்துக்கு வருமானம் கிடைக்கும், பிடிஓ அலுவலக ஊழியர்களுக்கு அன்பளிப்பும் கிடைக்கும். 

அருந்ததியர்களால் என்ன கிடைக்கும் என்று ஏளனமாக கூறி எள்ளி நகையாடுகின்றனராம் பல அலுவலர்கள் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கை எடுக்காமல் இத்தனை ஆண்டுகளை உருண்டோடச் செய்தது மாவட்ட  நிர்வாகத்தின் குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். 

அரசு என்னதான் திட்டம் போட்டாலும் சென்றடைவது அதிகாரிகள் கைகளில்தான் உள்ளது என்பதற்கு இந்தப் பணியும் சிறந்த சான்றாக உள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனாவது அருந்ததியர்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா? தேங்கி நிற்கும் நீரால் பலருக்கு பல தொந்தரவுகள் ஏற்படுகிறது. இதை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

No comments

Thank you for your comments