Breaking News

தமிழகத்தில் முதல் சூரிய மின்சக்தி பூங்கா

சென்னை

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இதுவரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக இந்த ஆண்டு 1 இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் ரூ.3,025 கோடியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் முதல் சூரிய மின்சக்தி பூங்கா திருவாரூரில் அமையவுள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23-9-2021)  அறிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.9.2021) வழங்கினார்.

எரிசக்தி துறையின் 2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு ஆணைகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியம் - மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் - மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்கும் இந்த சிறப்பான விழாவில் நானும் பங்கேற்கக் கூடிய நல்லதொரு வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்த அமைச்சர் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று இலட்சக்கணக்கான உழவர்களின் முகத்தில் மலர்ச்சியை உருவாக்க கூடிய வகையில் ஒரு திட்டமாக, இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இத்திட்டத்தை விழா நடத்தி நடைபெறக்கூடிய வகையிலே இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

நான் பதவி ஏற்கவில்லை... பொறுப்பை ஏற்றுள்ளேன்...

மே மாதம் 7-ஆம் நாள் நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றேன் என்று சொல்லமாட்டேன் பொறுப்பை ஏற்றேன், அதுதான் சரியாக இருக்கும். அன்று முதல் இன்று வரை நாள்தோறும் ஏராளமான திட்டங்கள் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களுடைய பயன்பாட்டிற்கு போகக்கூடிய வகையிலே இருக்க வேண்டும் என்பதுதான் அரசினுடைய திட்டமாக இருக்கிறது.

சில திட்டங்கள் அந்த நேரத்துக்கு தேவையானதாக இருக்கும்.  சில திட்டங்கள் சில ஆண்டுகளுக்குத் தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள்தான் தலைமுறை தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் தலைமுறை தலைமுறைக்கு பயனுள்ளதான திட்டம்தான், இங்கே தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டமாக இது தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, உழவர்கள் பயன்பெறுவதால், தங்களுக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்து மக்களுக்கே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தரப் போகிறார்கள். அத்தகைய மகத்தான திட்டம்தான் இந்த திட்டம்.

கடந்த 2006-11 திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில், எனக்கு முன்னால் பேசிய அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, 2 இலட்சத்து 9 ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது. ஆனால்

2011-16 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 82 ஆயிரத்து 987 பேருக்கும், அதை தொடர்ந்து 2016-21 அ.தி.மு.க. ஆட்சியில் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 592 பேருக்கும்தான் புதிய இணைப்புகள் தரப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சிக்கும் தி.மு.க. ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான்!

பத்தாண்டு காலத்தில் சுமார் 2 லட்சம் இணைப்புகள்தான் அ.தி.மு.க. ஆட்சியில் தரப்பட்டன. ஆனால் நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 4 மாத காலத்தில் 1 லட்சம் இணைப்புகளை நாம் கொடுக்கப் போகிறோம். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு; சில நாட்களுக்கு முன்னால், விவசாய சங்கப் பிரதிநிதி குறிப்பிட்டு சொன்னார், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக துணிச்சலாக, ஒன்றிய அரசின் மீது பயம் கொண்டு அல்ல, ஒன்றிய அரசை எச்சரிக்கக்கூடிய வகையிலே அந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று நாம் சட்டமன்றத்திலே தீர்மானாக  நிறைவேற்றி இருக்கிறோம். இதை உழவர் பெருங்குடி பெருமக்கள் நிச்சயம் மறக்க மாட்டீர்கள்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு போன்ற பெரிய பிரச்சினையாக இருந்தாலும், வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும், அதற்கு  உடனடியாகச் செவி மடுத்து அதனை நிறைவேற்றித் தரக்கூடிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.

காவிரி நடுவர் மன்றம் அமைக்க  வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்முதலில் தீர்மானமும் நிறைவேற்றினார்கள். உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினைத் தொடர்பான வழக்கையும் போட்டார்கள்.

காவிரி இறுதித் தீர்ப்பும் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான், 2007-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. 192 டி.எம்.சி. மட்டுமே என்றுதான் தீர்ப்பு வந்தது. அதற்கு பின்னால் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அந்தக் கூட்டத்தின் முடிவின்படி நாம் நீதிமன்றத்துக்கும் போனோம்.

நிலமற்ற ஏழை உழவுத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவேன் என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் நிலமும் வழங்கப்பட்டது.

1 லட்சத்து 89 ஆயிரத்து, 719 ஏக்கர் நிலத்தை, 1 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேருக்கு வழங்கிய ஆட்சிதான் கலைஞருடைய ஆட்சி. இவை அனைத்துக்கும் மேலாக உழவர்களுக்கு இலவச மின்சாரம் அறிவித்ததும் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

1978-ஆம் ஆண்டுமுதல் உழவர்கள் மின் கட்டணத்தில் சலுகை கேட்டு போராடினார்கள். 1990-ஆம் ஆண்டு மின் கட்டணத்தில் சலுகை அல்ல; ஒரு பைசா குறைக்க வேண்டும் என்பது தான் விவசாயிகள் வைத்த கோரிக்கை.

இப்போது திமுக ஆட்சியில் ஒரு பைசா கூட தரவேண்டிய அவசியமில்லை என்று தலைவர் கலைஞர் அவர்கள் அந்த திட்டத்தை அறிவித்தார்.

இந்த வரிசையில் ஒரு லட்சம் புதிய இணைப்புகள் என்ற இந்தப் புதிய திட்டத்தை இன்றைக்கு நாம் தொடங்கி வைத்திருக்கிறோம்.

‘ஒரு லட்சம் புதிய இணைப்புகள் வழங்குகிறோம்’ - அதிலும் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம் என்றால், தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். அது உங்களுக்கே தெரியும். செழிப்பாக அல்ல; கடந்தகால ஆட்சியாளர்கள் சீரழித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதுதான் அதிமுக ஆட்சியினுடைய சாதனை. 1.59 லட்சம் கோடி ரூபாய்க்கு கடனில் இருக்கிறது மின்சார வாரியம். ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறது. மிக அதிகமான விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளார்கள். குறுகியகால ஒப்பந்தங்களாக இல்லாமல், மிக நீண்டகால ஒப்பந்தங்களாகப் போட்டுள்ளார்கள். இதைவிட கொடுமை என்னவென்றால், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பதிவேட்டில் இருப்பதும் - இருப்பு இருப்பதும் வித்தியாசமாக உள்ளது. அதிலும் முறைகேடுகள்.

அமைச்சர் அவர்கள் சொன்னதைப்போல கடந்த 10 வருட ஆட்சியில் பராமரிப்பு பணிகளே நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக நிறுவப்பட்ட நிறுவு சக்தி 1481 மெகாவாட். அதில் 1428 மெகாவாட் 2006-2011 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது திட்டமிடப்பட்டவை ஆகும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அ.தி.மு.க. ஆட்சியில், 10 ஆண்டுகளில் நிறுவப்பட்ட நிறுவு சக்தி வெறும் 53 மெகாவாட்தான். இப்படி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார வாரியத்தின் அவலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதிலிருந்து மின்சார வாரியத்தை காப்பாற்றுவதற்கான பணிகள் இப்போது தொடங்கி இருக்கிறது. பராமரிப்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. புதிய மின் திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

17 ஆயிரத்து 980 மெகாவாட் மின்சாரத்தை வரும் பத்தாண்டுகாலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே திட்டமிடுதலில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி இருக்கிறோம்.

திருவாரூரில் முதல் சூரிய சக்தி பூங்கா

சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம். திருவாரூரில் முதல் சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. சூரிய மின் உற்பத்தி, புனல் நீரேற்று மின் உற்பத்தி மற்றும் இயந்திர மின் திட்டங்களைத் தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கவும், நிதி தேவையான,

1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாயை திரட்டுவதற்கும் இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துடன் 6.9.2021 அன்று ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்.

இன்றைக்கு புதிய இணைப்பு பெற்றவர்கள், மின்சாரத்தை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மின்சாரம் தயாரிப்பு என்பதே மிகப்பெரிய செலவு வைக்கும் திட்டமாக இருக்கிறது. அதனால் முடிந்தளவு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துங்கள்.

உழவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை இன்று வழங்கி இருக்கிறோம்.

இது தமிழ்நாட்டில் உழவுப் புரட்சிக்கு அடித்தளமாக அமையட்டும்! உற்பத்திப் பரப்பு அதிகமாக இது உதவிகள் செய்யட்டும்!

மின்துறை அமைச்சராக இருந்தாலும் வேளாண் துறையைச் சேர்ந்த உழவர் பெருங்குடி மக்களுக்கும் சேர்த்து நல்லதொரு திட்டத்தைச் செயல்படுத்திய மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களைப் மீண்டும் மீண்டும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்!

அனைவரும் சேர்ந்து இம்மண்ணையும் மக்களையும் காப்போம் என்று கூறி விடைபெறுகிறேன்!  நன்றி, வணக்கம்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை அரசு முதன்மைச் செயலாளர். தர்மேந்திர பிரதாப் யாதவ், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் கலந்து கொண்டனர்.     

          

No comments

Thank you for your comments