பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகப் பேச்சு - தேசியச் செய்திகள் தொகுப்பு
புதுடெல்லி :
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் குடியரசின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் சமீபகால நிலவரங்கள் உள்ளிட்ட பிராந்திய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தார்கள். இதன் காரணமாக தீவிரவாதம், போதைப் பொருள்கள், சட்டவிரோத ஆயுதங்கள், மனிதக் கடத்தல் போன்ற செயல்கள் பரவக்கூடும் என்ற தங்களது கருத்தை வெளிப்படுத்திய அவர்கள், மனித உரிமைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.
இந்திய - பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் இருதரப்பு நடவடிக்கைகளையும், இந்தப் பகுதியில் நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் ஊக்குவிப்பதற்காக இந்திய - பிரான்ஸ் கூட்டணி அளித்துவரும் முக்கியமான பங்களிப்பையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
இரு நாடுகளும் போற்றும் இந்திய- பிரான்ஸ் கேந்திரக் கூட்டணியின் நலனிற்காக இரு நாடுகளும் தொடர்ந்து நெருங்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
அணுகக்கூடிய தேர்தல்கள் 2021
தேசிய மாநாட்டை நடத்தியது
இந்திய தேர்தல் ஆணையம்
புதுடெல்லி:
அணுகக்கூடிய தேர்தல்கள் 2021 என்ற மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் காணொலி வாயிலாக இன்று நடத்தியது. தலைமைத் தேர்தல் அதிகாரிகள், பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் சார்பாக பொது சமூக நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள்.
தேர்தல் நடைமுறைகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக அவர்கள் சந்திக்கும் தடைகளை எதிர்கொள்வதற்கான உத்திகள் தொடர்பாக ஆலோசிப்பதும், அணுகுவது சம்பந்தமாக தற்போது நடைமுறையில் உள்ள கொள்கைகளை மதிப்பீடு செய்வதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
தேர்தல்களை மேலும் உள்ளடக்கியதாகவும், அணுகக் கூடிய வகையிலும், வாக்காளர்களுக்கு எளிதான முறையிலும் நடத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதித்தன்மையை வலியுறுத்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா, தேர்தல் நடைமுறைகளில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வாக்காளர்களாகிய முதன்மை பங்குதாரர்களின் முடிவு எடுக்கும் பணிக்கு ஆணையம் மதிப்பளிப்பதாகக் கூறினார். தேர்தல் நடைமுறையில், ஒவ்வொரு நிலையிலும் உள்ளடக்கம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதற்காக வழிகாட்டுதல்களை கட்டமைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்குகளை செலுத்துவதில் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு சுமுகமான மற்றும் கண்ணியமான அனுபவத்தை வழங்குவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து மையங்களிலும் கீழ்தளத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதாகவும் திரு சுஷில் சந்திரா குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், அனுப் சந்திரா, செயலாளர் உமேஷ் சின்ஹா ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினார்கள்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
குஜராத்தில்
ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள
ஹெராயின் பறிமுதல்
ஆப்கானிஸ்தானிலிருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட 3 டன் எடை கொண்ட ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் ஹெராயின் போதைப் பொருட்கள் இருப்பதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நடத்திய சோதனையில் இரு கன்டெய்னர்களில் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. ஒன்றில் இரண்டு டன் ஹெராயினும், மற்றொன்றில் ஒரு டன் ஹெராயினும் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இரு கன்டெய்னர்களும் ஈரானில் இருந்து குஜராத்திற்கு வந்துள்ளது. இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் பிடிபட்ட போதைப் பொருட்களில் இது அதிக மதிப்பு கொண்டதாக இருப்பதாகாவும், தற்போது பிடிபட்டது ஹெராயின் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக அளவில் ஹெராயின் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு ஆப்கானிஸ்தான். உலக அளவில் 80 முதல் 90 சதவீத ஹெராயின் இங்கிருந்துதான் சப்ளை செய்யப்படுகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பணம் தேவைப்படும் என்பதற்காக, கடந்த சில வருடங்களாக தலிபான்கள் ஹெராயின் மூலம் அதிக அளவில் பணம் திரட்டியதாக கூறப்படுகிறது.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
திருப்பதியில்
இலவச தரிசன டோக்கன் பெற
குவிந்த பக்தர்கள்
திருப்பதி :
ஆந்திராவில் உள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்பட வெளிமாநில பக்தர்களும் இலவச டோக்கன் பெறுவதற்காக இரவிலேயே திருப்பதிக்கு வந்து விடுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்களும், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மூலமும், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்றவர்களும் வழக்கம் போல் தரிசனத்திற்கு சென்று வந்தனர். இதனால் இலவசமாக ஏழுமலையானை சாமானிய பக்தர்கள் தரிசிக்க இயலாமல் போனது. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் சுமார் 4 மாதங்கள் கழித்து சோதனை அடிப்படையில் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டும் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வழக்கம் போல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இன்று முதல் வெளிமாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் தீர்மானித்தது.
இதனை அறிந்த பக்தர்கள் தற்போது திருப்பதியில் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். தினமும் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
புரட்டாசி மாதம் என்பதால் ஆந்திராவில் உள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்பட வெளிமாநில பக்தர்களும் இலவச டோக்கன் பெறுவதற்காக இரவிலேயே திருப்பதிக்கு வந்து விடுகின்றனர்.
திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். டிக்கெட் பெறுவதற்காக கவுண்டர்களில் வரிசையில் காத்து நிற்கின்றனர். காலை 6 மணி முதல் டோக்கன்கள் வழங்கும் பணி தொடர்கிறது.
டோக்கன் பெற்ற பக்தர்கள் ஆர்வமுடன் சென்று ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
சாலை விபத்துகளை குறைக்க
லாரி ஓட்டுநர்களுக்கு பணி நேரம் நிர்ணயிக்க ஆதரவு
புதுடெல்லி :
சாலை விபத்துக்களை குறைக்க கனரக லாரிகளை இயக்கும் டிரைவர்களின் வேலை நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தி ஒன்றில் கட்கரி தனது ஆதரவு கருத்தை வெளியிட்டுள்ளார்.
விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணியாற்ற வேண்டிய அவசியமில்லை. அதேபோல கனரக லாரிகளை இயக்கும் டிரைவர்களுக்கும் பணி நேரத்தை நிர்ணயம் செய்வது அவசியம்.
அவ்வாறு பணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டால் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இயங்கும் டிரைவர்களை நாம் கண்டறிந்து அவர்களைக் கட்டுப்படுத்த இயலும் இதற்கு உதவுகிற சென்சார்களை லாரிகளின் பொருத்த வேண்டும் என்று தவறாமல் வலியுறுத்தும்படி சாலைப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு குழு கூட்டங்கள் தவறாமல் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..
இந்தக் கூட்டங்களில் கனரக லாரிகளை இயக்கும் டிரைவர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதை உறுதி செய்யும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பாக மாநில முதல்-மந்திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
தமிழகத்திற்கு உணவு மானிய நிலுவையை வழங்க
மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
புதுடெல்லி :
தமிழ்நாடு மாநிலத்திற்கு வரவேண்டிய உணவு மானிய நிலுவைத்தொகையை வழங்கும்படி ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்திட்ட அமைச்சர் பியூஸ் கோயலிடம் தமிழக உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்திட்ட அமைச்சர் பியூஸ் கோயலை 21-09-2021 ஆம் தேதி செவ்வாயன்று புதுடெல்லி உத்யோக்பவானில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு மாநிலத்திற்கு வரவேண்டிய உணவு மானிய நிலுவைத்தொகை மற்றும் உணவுத்துறை குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தினார் .
இச்சந்திப்பின்போது தமிழ் நாடு அரசின் புதுடில்லிக்கான சிறப்புப் பிரதிநிதி விஜயன் , திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி .வேலுசாமி, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுத்தின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் வி.ராஜாராமன். தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர் அஷிஷ் சாட்டர்ஜி. ஆகியோரும் உடனிருந்தனர்.




No comments
Thank you for your comments