தொழிலாளர்களுக்கு கொரானா தடுப்பூசி சிறப்பு முகாம்... அனைவரும் செலுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் கொரானா தடுப்பூசியினை சிறப்பு முகாம்களில் செலுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவிட்-19 வைரசின் தாக்கத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் முக்கிய பங்காக தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக அளித்து வருகிறது.
அதனை தொடர்ந்து தொழிற்சாலைகள் நிறைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்துப் பணியாளர்களுக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசியை போடும் முகாமை துரிதப்படுத்தும் பொருட்டு தொழில் நிறுவனங்கள் அதிகமாக இயங்கி வரும் சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைந்துள்ள திருப்பெரும்புதூர். இருங்காட்டுக்கோட்டை, மாம்பாக்கம், பிள்ளைப்பாக்கம், வல்லம் வடகால், ஒரகடம், திருமுடிவாக்கம் ஆகிய இடங்களில் தினந்தோறும் கோவிட்-19 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
எனவே, தொழிலாளர்கள் இம்முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சிப்காட் மற்றும் சிட்கோவில் உள்ள நிறுவனங்கள் தவிர ஏனைய தொழில் நிறுவன தொழிலாளர்களும் நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்டம் என்ற இலக்கை அடைய அனைவரும் விடாமுயற்சியுடன் கடைசி ஒரு தொழிலாளர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்ய வேண்டும்.
கொரோனா தொற்றினை ஒழிக்க தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் (044-27238837, 9688036736) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments
Thank you for your comments