மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் – அமைச்சர் கேஎன் நேரு துவக்கினார்
சென்னை
தமிழ்நாடு முழுவதும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை "மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்" அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள் ஆகியவற்றில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இத்திட்டத்தினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு 20.09.2021-ஆம் தேதியன்று சேலம் மாநகராட்சியில் துவக்கிவைத்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் 20.09.2021 முதல் 25.09.2021 வரை தமிழகத்தில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்குப் பருவமழையினால் நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் மற்றும் மழைநீர் புகும் வாய்ப்பு உள்ளதாலும், அதிகப்படியாகத் தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளதாலும், மழைநீர் கால்வாய்களுடன் கலந்து தேங்குவதால், இதர தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார இடர்பாடுகள் ஏற்டாமல் தவிர்த்திடும் பொருட்டு தமிழகம் முழுவதும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை "மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்" அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவற்றில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இத்திட்டத்தினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு 20.09.2021-ஆம் தேதியன்று சேலம் மாநகராட்சியில் துவக்கிவைத்துள்ளார்.
இப்பணிக்காகக் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்களில் சேகரமாகியுள்ள வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு பொக்லைன், ஜெட்ராடிங் இயந்திரம், ஜேசிபி இயந்திரம் மற்றும் தேவைப்படும் இதர இயந்திரங்களைப் பயன்படுத்தி இப்பணியானது துரிதமாக நடைபெற அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக உள்ளாட்சிகளிலுள்ள வார்டுகளை 6 பிரிவுகளாகப் பிரித்து 6 நாட்களுக்குள் பணியினை முடிப்பதற்கு ஏதுவாக நகரப்பகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
மாநகராட்சிகள்
14 மாநகராட்சிகளிலுள்ள 829 வார்டுகளில் 1362 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 23838 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தப் பணியினை மேற்பார்வையிட 1572 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
நகராட்சிகள்
7 நகராட்சி நிர்வாக மண்டலங்களிலுள்ள 121 நகராட்சிகளில் 3,497 வார்டுகளில் 4,591 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 42,634 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தப் பணியினை மேற்பார்வையிட 3051 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பேரூராட்சிகள்
மொத்தமுள்ள 528 பேரூராட்சிகளில் 7951 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் 205 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களும் தூர்வாரப்படவுள்ளன. இதற்காக 2,830 இயந்திரங்களும் 28,624 பணியாளர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 178 சாலைகள், மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 2414 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் கால்வாய் மொத்த தூரம் 82.884 கி.மீ ஆகும்.
மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தி எடுக்கப்படும் வடிகால் படிவங்களை அகற்றும் பணி 227 சாலைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக 722 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். வடிகால் படிவுகளை அகற்றும் பணி 2718 ஆகும்.
இந்த பணிகளுக்காக 7 ஜெட்ராடிங் மெசின், 3 ரோபோடிக் எக்சிவேட்டர், 1 ஆம்பியன், 3 மினி ஆம்பியன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளது.
மாநில அளவில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் விவரங்கள்
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் 9097 இயந்திரங்கள் மூலம் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணிக்காக 97550 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 4623 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


No comments
Thank you for your comments