Breaking News

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகை... பரபரப்பு

சென்னை:

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாத அவலநிலை.... அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதி மக்களுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இரவு நேரங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத அவல நிலை நீடிக்கின்றது என்று அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இந்நிலையில்,  பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த வேளாங்கண்ணி(42) என்ற பெண்மணி நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பெற்று மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

பின்னர்  இரவு 11 மணி அளவில்  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  அவரது கணவர் மற்றும் குழந்தைகள் சிகிச்சை அளிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லை....

இதனையடுத்து, அங்கு மருத்துவர்கள் இல்லாததால், செம்மஞ்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் பொழுது வழியிலேயே பெண்மணி உயிரிழந்து விட்டார்.

இந்த நிலையில், இரவு நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லததால் தான் இறப்பு நேர்ந்தது என்று,  இறந்த வேளாங்கண்ணியின் உறவினர்கள் பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 

தொடர்ந்து இரவு நேரங்களில் சிகிச்சை பெறுவதற்கு வரும் பொழுது மருத்துவர்கள் இல்லாததால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குற்றஞ் சாட்டுகின்றனர்.

விரைவில் தமிழக அரசு பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

✒ சோழிங்கநல்லூர் செய்திகளுக்காக ரமேஷ்

No comments

Thank you for your comments