வலுவிழந்து பாழடைந்த நிலையில் குன்றத்துார் காவலர் குடியிருப்பு... சீரமைக்க வலுக்கும் கோரிக்கை...
குன்றத்துார்:
குன்றத்துார் காவலர் குடியிருப்பின் ஒரு பகுதி வலுவிழந்து, சிமென்ட் பூச்சு பெயர்ந்து கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மழைக் காலத்தில், பக்கவாட்டு சுவரில் இருந்து தண்ணீர் கசிகிறது. புதர்கள் வளர்ந்து பாம்புகளின் நடமாட்டம் காணப்படுவதால் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன.
குன்றத்துார்-ஸ்ரீபெரும்புதுார் சாலையில், உழவர் சந்தை அருகே குன்றத்துார் காவல் நிலையம் இயங்கி வருகிறது. 1.95 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தின் ஒரு பகுதியில், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர் ஆகியோருக்கு தனித்தனி குடியிருப்புகள் உள்ளன. இதில், காவலர்களுக்கான எட்டு வீடுகள் உடைய குடியிருப்பு வலுவிழந்து காணப்படுகிறது.
மழைக் காலத்தில், பக்கவாட்டு சுவரில் இருந்து தண்ணீர் கசிகிறது. மற்றொரு புறம், சிமென்ட் பூச்சு அடிக்கடி பெயர்ந்து கொட்டுகிறது. கட்டடத்தின் வெளிப் புறத்திலும் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, பாழடைந்த கட்டடம் போல் மாறிவிட்டது.
காவல் நிலையத்தின் பின்புறத்தில், பல சென்ட் இடம் காலியாக உள்ளது. அங்கு, குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அந்த இடத்தை முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் வளர்ந்து புதராக உள்ளது. இரவில், பாம்புகளின் நடமாட்டம் காணப்படுவதால், பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.
வலுவிழந்து காணப்படும் குடியிருப்பை புனரமைக்கவும், முறையாக பராமரிக்கவும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
No comments
Thank you for your comments