Breaking News

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் சாலை தடுப்பு கட்டை அமைப்பது மந்தம்!

வேலூர், செப்.16-

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் சாலை நடுவில் தடுப்பு கட்டை அமைப்பது தொடர்பான பணி மந்தகதியில் நடந்து வருகிறது. இதற்கு அதிகாரிகள் முட்டுக் கட்டையாக இருப்பதாக ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்படுகிறது.

வேலூர் மாநகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். வேலூர் ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. இதனால் வேலூர் மாநகரை அழகுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் ஆங்காங்கே விட்டு விட்டு நடந்து வருகிறது. இருந்தாலும் தற்போது மிகவும் முக்கியச் சாலையான பழைய பைபாஸ் சாலையில் சாலையின் நடுவில் இரும்பு கிரில்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த இரும்பு கிரில்கள் சில இடங்களில் ஆங்காங்கே வெட்டப்பட்டு அவர்கள் விருப்பம் போல வழி செய்து பயன்படுத்தி வந்தனர் சில விஷமிகள். இந்நிலையில் இந்த பணிகளை இரவோடு இரவாக நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த இரும்பு கிரில்களை வெட்டியெடுத்து பழயை காயலான் கடைக்கு போட்டு பணம் வாங்கிக் கொண்டவர்களும் இங்கு பலர் உண்டு.

இதுபோதாது என்று அவர்கள் உருவாக்கிய தவறான வழியால் விபத்துக்களும் பஞ்சமின்றி நடந்தன. இதனால் அப்பாவி இளைஞர்கள் பலர் பலியாகியதுதான் மிச்சம். இந்நிலையில்  வேலூர் பகுதியில் விபத்துகள் அதிகளவில் நடந்தது. இதை தடுக்கும் விதமாக இரும்பு கிரில்களை அகற்றி விட்டு சாலையின் நடுவில் சிமெண்டால் ஆன தடுப்பு கட்டையை அமைக்கும் பணி கடந்த ஓரிரு நாட்கள் முன்பு தொடங்கியது. 

இதற்காக சாலையில் இருந்த இரும்பு கிரில்கள் முற்றிலும் அகற்றப்பட்டன. இதையடுத்து அந்த இடத்தில் சிமெண்ட் தடுப்பு கட்டை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடிக்கடி வந்து பணிகள் நடைபெறாத வண்ணம் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் வேகமாக நடக்க வேண்டிய பணி மந்தகதியில் நடக்க ஆரம்பித்து விட்டது.

இந்த பணிக்கு டெண்டர் விட்ட போது பணத்தை பங்கு பிரித்து தங்களுக்கு வேண்டிய வகையில் எடுத்து கொண்டார்களாம். அதாவது முன்னாள் அமைச்சர் முதல் அதிமுகவில் உள்ள புள்ளிகள் வரையில் என்று சொல்லியே ஆக வேண்டும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

இதற்கு பிறகு டெண்டர் எடுத்தவருக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை. இதனால் பணியை நிறுத்தி நிறுத்தி செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொந்தரவு செய்கின்றனராம். இதேபோன்றுதான் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணியும் என்று சொல்லியே ஆக வேண்டும். இப்படி பல இன்னல்களுக்கு இடையில் பணி நடக்கிறதாம். ஆனால் எப்போது பணி முழுமையாக நிறைவு பெறும் என்று தெரியவில்லை. 

தற்போதுள்ள ஆட்சியாளர்களும் அதிமுக ஆட்சியின் போது விடப்பட்ட டெண்டர்களில் சிறப்பு கவனம் செலுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாநகர வளர்ச்சியில் அக்கரை கொண்டு பணிகள் நிறைவு பெற ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பார்களா? இல்லை இடையூறு ஏற்படுத்துவார்களா? என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒப்பந்ததாரரோ அரசு அதிகாரிகள் சொல்வது போன்று கேட்டால் மட்டுமே மீதமுள்ள பில் தொகை எனக்கு கிடைக்கும் என்கிறாராம். இல்லையெனில் பணியில் தரம் இல்லை என்று ரிஜெக்ட் செய்து விடுவார்கள் என்று அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளாராம். எது எப்படியோ விரைவில் பணி நிறைவு பெற்று மாநகரம் புதுப்பொலிவு பெற்றால் போதும் என்கின்றனர் மாநகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். சிலர் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற ரீதியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments