ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிறை தண்டனை !
சென்னை:
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அலிசியா தீர்ப்பு வழங்கினார்.
ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சி அமைத்த போது 1991 முதல் 1996 வரை அ.தி.மு.க. அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திரகுமாரி இருந்து வந்தார்.
அவர் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. 1992- 96-ம் ஆண்டு அவரது கணவரும், வக்கீலுமான பாபு, “ மெர்சி மதர் இந்தியா” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கினார். மேலும் ‘பரணி சுவாதி’ என்ற பெயரிலும் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அந்த சமயத்தில், அவருடைய கணவர் பாபு நடத்தி வந்த அறக்கட்டளை மூலமாக மெர்சி மதர் இந்தியா என்ற அறக்கட்டளை, பரணி சுவாதி கல்வி அறக்கட்டளை சார்பில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாக கூறி சமூக நலத்துறை சார்பில் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?
இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று சமூக நலத்துறையின் அப்போதைய செயலாளர் லட்சுமி பிரானேஷ் கடந்த 1997 ஆம் ஆண்டு அளித்த புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்த்தில் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இதன் விசாரணை முடிந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர். இதன் மூலம் ரூ.15 லட்சத்து 45 ஆயிரம் அரசு பணம் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு விசாரணை நடந்து வந்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி அலிசியா வழக்கை விசாரித்து வந்தார். அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டு விசாரணை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி கிருபாகரன் இறந்து விட்டார். இதனால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
இன்று அந்த வழக்கு நீதிபதி அலிசியா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா,
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தார்.
இதில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரின் கணவர் பாபுவிற்கும் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்குவதாகவும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிருபாகரன் இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட நீதிபதி, வெங்கடகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு வெளியானதும் அதிர்ச்சியடைந்த இந்திரகுமாரிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தண்டனை பெற்ற இந்திர குமாரி தற்போது தி.மு.க.வில் மாநில இலக்கிய அணி செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments