Breaking News

தலைமைச் செயலகமாக மாறுகிறதா ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை? மீண்டும் வைக்கப்பட்ட கல்வெட்டால் பரபரப்பு

சென்னை, செப்.16-

ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.

தற்போது செயல்பட்டுவரும் தலைமை செயலகத்திற்கு வயதாகிவிட்டதால் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கடந்த 2006 மற்றும் 2011ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி முடிவுசெய்தார்.

2007ம் ஆண்டு புதிய தலைமைச் செயலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதில் பங்கேற்றார்.


தலைமைச் செயலக கட்டிடம் கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் திட்ட மதிப்பு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் 581.80 கோடி ரூபாய் செலவிலேயே, அது கட்டி முடிக்கப்பட்டது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் விதான் சவுதா போன்ற சட்டசபை கட்டிடங்கள் கலை நயத்தோடு உள்ள நிலையில், இந்த கட்டிடத்தை பார்ப்பதற்கு அழகில்லாமல் இருப்பதாக அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா விமர்சனம் செய்து அறிக்கை கூட வெளியிட்டு இருந்தார். தொப்பி போன்று உள்ளது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன...

இந்நிலையில்தான் 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பொறுப்புக்கு வந்தது. அந்த வருடம் ஆகஸ்ட் 19ம் தேதி புதிய சட்டமன்ற கட்டிடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதன் பிறகு தலைமைச் செயலக கட்டிடம், பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தலைமைச் செயலகமாக திறக்கப்பட்டபோது, மன்மோகன் சிங், கருணாநிதி, சோனியா காந்தி பெயர்கள் பொரித்து, வைக்கப்பட்ட கல்வெட்டு அகற்றப்பட்டது.

ஜெயலலிதா புதிய மருத்துவமனையை திறந்து வைத்ததற்காக ஒரு கல்வெட்டு அங்கே பொரித்து வைக்கப்பட்டது. இதன் பிறகு திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை. தொடர்ந்து அதிமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மேலும் மேலும் மேம்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில், கருணாநிதி, மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்ற திறப்புவிழா கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் அரசு பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியை ஜெயலலிதா திறந்த வைத்த கல்வெட்டு அகற்றப்பட்டு அதன் அருகிலேயே மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு குழுவினர் வருகை தந்து இந்த கல்வெட்டை அங்கு வைத்து விட்டு சென்றனர். புதிய தலைமைச் செயலகம் என்ற பெயர்தான் அந்த கல்வெட்டில் இருப்பதால் ஒருவேளை மருத்துவமனை கட்டிடம் மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.


கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அவரது மகனான முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. ஆனால், அரசு மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றும் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி விடும் என்ற ஒரு பேச்சும் இருக்கிறது.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு 6 முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் முக்கியமானவை தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைக்கப்படும் என்ற அறிவிப்புதான். 

இந்த அறிவிப்பு வெளியானபோதே ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச்செயலகமாக மாற்றப்படுமா என்ற கேள்வியும், சந்தேகமும் ஏற்ப்பட்டது. தற்போது பதிக்கப்பட்ட கல்வெட்டால் மேலும் இது பேசும்பொருளாக மாறியுள்ளது. 


ஆனால், இதுவரை அரசிடம் இருந்து எந்தவொரு அதிகாரபூர்வமாக இது பற்றி தகவல் வெளிவரவில்லை. ஒருவேளை கல்வெட்டை மட்டும் வைத்து விட்டு சென்றிருக்கலாம். இதை தலைமைச் செயலகமாக மாற்றும் எண்ணம் இல்லாமலும் இருக்கலாம் என்கிறார்கள். எது எப்படியோ, அரசு உறுதியான தகவல் தெரிவித்த பிறகு தான் இந்த கல்வெட்டு வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்த பின்னணி தெரிய வரும்.

No comments

Thank you for your comments