அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி
சென்னை:
அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தலாம் என்று தமிழக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரம் வருமாறு:
கிராம சபை கூட்டங்களை திறந்தவெளியில் நடத்த வேண்டும். கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடைவெளியுடன் இருக்குமாறு இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும்.
கூட்டம் நடத்துவதற்கு முன் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
6 அடி சமூக இடைவெளி இருப்பதையும் முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது.
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை கிராம சபை கூட்டம் நடைபெறும் என விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் அரசாணை நகல் 👇



No comments
Thank you for your comments