அரசின் பொய்களை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை மக்களுக்கு உண்டு.. நடுநிலையான ஊடகம் தேவை...நீதிபதி டி ஒய் சந்திரசூட்
புதுடெல்லி :
உண்மைக்காக மக்கள் அரசை மட்டுமே நம்ப முடியாது.. சில இடங்களில் ஒருவேளை சர்வாதிகார அரசாக இருந்தால் அங்கே அதிகாரத்தை கட்டமைக்க பொய்கள் பரப்பப்பட்டிருக்கும். இதை கோவிட் 19 பரவலின் தொடக்கக் காலத்தில் காண முடிந்ததது. எனவே அரசின் பொய்களை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை பொதுமக்களுக்கு உள்ளது.
போலி செய்திகளை எதிர்கொள்ள நாம் நமது பொதுத் துறை அமைப்புகளை பலப்படுத்த வேண்டும். அதே போல் நமக்கு நடுநிலையான ஊடகம் தேவை" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட் கூறினார்.
நீதிபதி எம்சி சக்லா நினைவு சொற்பொழிவு ஆற்றிய நீதிபதி சந்திரசூட்,
சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் பொய் மற்றும் போலி செய்திப் பரவல் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், போலிச் செய்திகள், போலியான கருத்துகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அறிவுஜீவிகளின் கடமை.
ஊடகங்கள் என்பது அரசியல் அல்லது பொருளாதார செல்வாக்கு உள்ளவர்களிடம் இருந்து எந்தவொரு நெருக்கடிக்கும் அடிபணியாமல், அரசாங்கம் அதன் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதாக இருக்க வேண்டும். அப்படி ஊடக அமைப்புகள் செயல்படுவதற்கு நாம் பாடுபட வேண்டும். ஒரு பக்கமாக செய்திகளை வழங்காமல் நடுநிலையுடன் ஊடகங்கள் செய்திகளை வழங்க வேண்டும்.
நமது தேர்தலின் ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாக்க வேண்டும், மேலும் வாக்களிப்பதை ஒரு உரிமையாக மட்டுமல்லாமல் கடமையாகவும் பார்க்க வேண்டும். இதைச் செய்ய, அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் வாக்கின் மதிப்பை உண்மையாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லா உண்மையும் அரசாங்கத்திடம் இருந்தே வரும் என்று நம்ப முடியாது. சில இடங்களில் ஒருவேளை அரசுகள் சர்வாதிகார அரசாக இருந்தால் அங்கே அதிகாரத்தை கட்டமைக்க பொய்கள் பரப்பப்பட்டிருக்கும். இதை கொரோனா பரவலின் தொடக்கக் காலத்தில் காண முடிந்ததது.
உலக நாடுகள் சில கொரோனா தொடர்பாக போலியான தகவல்களைத் தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உலக சுகாதார மையமும் பெருந்தொற்று காலத்தில் தொற்று பரவுதல் குறித்த போலி தகவல்கள் நிலவுவதாக கவலை தெரிவித்திருந்து.
பரபரப்புச் செய்திகளின் மீது ஈர்ப்பு கொள்வது மக்களின் இயல்பு. பெரும்பாலும் பரபரப்புச் செய்திகள் போலியானவையாக இருக்கின்றன. அதுவும் சமூக வலைதளங்களில் இவை வேகமாகப் பரவுகின்றன.
ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் தான் போலி தன்மையுடைய தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும். மக்களும் போலி செய்திகள் குறித்து விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.
நாம் இப்போது ஒரு விசித்திரமான காலகட்டத்தில் வாழ்கிறோம். இங்கே நான் பேசும் உண்மைக்கும் நீங்கள் பேசும் உண்மைக்கும் இடையே ஒரு போட்டி நிலவுகிறது.
நாம் வாசிக்கும் செய்தித்தாள் நம் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருந்தால் அதை நாம் வாசிக்கிறோம். நம் எண்ணங்களைச் சாராதோர் எழுதும் புத்தகங்களை வாசிக்க மறுக்கிறோம். தொலைக்காட்சியில் நம் எண்ணங்களுக்கு மாறான கருத்துகளுடன் யாரேனும் பேசினால் ம்யூட் போட்டுவிடுகிறோம். உண்மையைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை.
போலி செய்திகளை எதிர்கொள்ள நாம் நமது பொதுத் துறை அமைப்புகளை பலப்படுத்த வேண்டும். அதே போல் நமக்கு நடுநிலையான ஊடகம் தேவை" இவ்வாறு கூறினார்.

No comments
Thank you for your comments