ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை...! திமுக எம்எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை:
சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டிடம் குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது..
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில், கடந்த ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தை கவனித்த ஓபிஎஸ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக எம்எல்ஏ பரந்தாமன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
ஐஐடி குழு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புளியந்தோப்பு கட்டட ஒப்பந்தக்காரர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் அங்கிருந்த மக்களை வெளியேற்றிவிட்டு 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை ரூ. 112.16 கோடி செலவில் ஏ,பி,சி,டி என்று 4 பிளாக்குகளில் 864 வீடுகள் கட்டப்பட்டன.. இதை கட்டி முடிக்க மொத்தம் 17 மாதங்கள் ஆனது.. 9 அடுக்கு மாடி கொண்ட இந்த குடியிருப்பில் லிப்ட் வசதிகளும் உண்டு..
இதே போன்று அதே இடத்தில் 2019 முதல் 2021 வரை 18 மாதங்களில் 139.13 கோடி ரூபாய் செலவில் 1056 வீடுகள் கட்டப்பட்டன... 2019ல் தயாரான 864 வீடுகள், பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியதை அடுத்து, ஓராண்டிற்கு பின், 2020 பிப்., 5ம் தேதி 'டோக்கன் குலுக்கல்' முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அப்போது, பயனாளிகள் 1.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என, குடிசை மாற்று வாரியம் வலியுறுத்தியது. இந்த தொகையை செலுத்த முடியாத மக்கள் பலர், தற்காலிக கொட்டகையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதில், கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த பலர், அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்றனர். இவர்களை தவிர, 200 பேர் வாரியத்தை எதிர்த்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியேறினர்.
அவர்களுக்கு, மிகப் பெரிய பேராபத்து காத்திருப்பதை அப்போது அவர்கள் உணரவில்லை. வீட்டின் சுவர், கூரை உள்ளிட்ட பல பகுதிகளில், சிமென்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுகின்றன. விரல்களால் அழுத்தினால், சிமென்ட் பூச்சுகள் கையோடு வருவதால், கட்டடம் எப்போது விபத்துக்குள்ளாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இப்படிப்பட்ட சமயத்தில்தான் தொற்று பரவல் தமிழகத்திற்குள் நுழைந்தது.. எனவே, கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தொற்று அதிகமிருந்த நேரத்தில் தற்காலிக ஆஸ்பத்திரிகளாக பயன்படுத்தப்பட்டன... இபபோது தொற்று குறைந்துவிட்டதால், மறுபடியும் அந்த வாரிய குடியிருப்புகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்..
இந்நிலையில், அந்த வீட்டின் சுற்றுசுவர் பில்லர் படிக்கட்டுகள் உறுதியாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தன.. சுவர்களை தொட்டாலே பெயர்ந்து கொண்டு கொட்டுவதாகவும். அவை அனைத்தும் பெயர்ந்து பல வருடங்கள் ஆன கட்டிடம் போல இருப்பதாகவும், கதவு சட்டங்கள், ஜன்னல்களோரம் வெடிப்பு ஏற்பட்டு, எந்நேரத்திலும் விழும் அபாயகரமான நிலையில் உள்ளன.
இதனால் அங்கு வசிக்கும் பலரும், தங்கள் குடியிருப்பை விட்டு வெளியே வந்து உறங்குவதாக புகார் தெரிவித்தனர். அதனால் அங்கே குடியிருக்கவே பயமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தனர். இது விவகாரம் பூதகரமாக வெடித்தது. இது குறித்த காட்சிகள் சோஷியல் மீடியாவிலும் வைரலானது.
மநீம கமல்கூட இதுகுறித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார்..
இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும் (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2021
அதில், "புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு. இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் விஸ்வரூபமானதையடுத்து, திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் இதில் கவனம் செலுத்த தொடங்கியது..
நேற்றுகூட ஊரகத் தொழில் துறை மற்றும் குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம் பகுதிக்கு வந்து கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர்... அப்போது ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினர்.
பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பரசன் பேசும்போது,
"பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கழிவுநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் சரி செய்து இந்த குடியிருப்பை ஆடி மாதம் முடிந்த பிறகு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்.. ஆனால் அதற்குள் சிலர் இந்த கட்டிடத்தில் குடியேறி விட்டனர்..
இப்போது இந்த கட்டிடம் சம்பந்தமாக ஐஐடி ஆய்வு செய்ய பரிந்துரை செய்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய்த பிறகு அவர்கள் கொடுக்கும் கட்டிடத்தின் தன்மை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரமற்று இருப்பதால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தரமற்று இருப்பதாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அடிப்படையாக வைத்து இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
புளியந்தோப்பு குடியிருப்பு தொடர்பாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கே.பி. பூங்காவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது... குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் எழுந்துள்ளதால் இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டிடம் மிக வேகமாக கட்டப்பட்டு இருக்கிறது இந்த கட்டிடம் 2018 இல் தொடங்கப்பட்டு 2019-ல் முடிக்கப்பட்டது. தொட்டால் சினிங்கி பார்த்திருக்கிறோம் ஆனால் தொட்டாலே விழுகின்ற கட்டிடத்தை கண்டுபிடித்த ஆட்சி, கடந்த அதிமுக ஆட்சி... கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டி முடித்த அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இந்த கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளது தெளிவாக தெரிகிறது.
இந்த கட்டிடங்களை கட்டிய ஒப்பந்ததாரர்களை கண்டுபிடித்து அவர்கள் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் கட்டடம் தொடர்பான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பரசன்,
கே.பி. பார்கில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மிகவும் மோசமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரி உள்ளார்.
2016 ஆம் ஆண்டு அதிமுக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 112.60 கோடி செலவில் 850 குடியிருப்புகள் கட்டப்பட்ட 2020 மே மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரை கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தன. அடையாளம் தெரியாத நபர்களால் குடிநீர், கழிவு நீர் குழாய்க்குள் சேதமடைந்து உள்ளதை அறிந்து பழுது நீக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது.
கடந்த வாரம் பெய்த மழையால் கட்டிடம் சேதமடைந்துள்ளது. தரம் மற்றும் உறுதி தன்மையை அறிய நேற்று நானும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்து ஏற்கனவே இந்திய தொழில் நுட்ப கழகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஐஐடி அறிக்கை அளித்ததும், தவறு கண்டறியப்பட்டால் ஒப்பந்ததாரர், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சிக்கலில் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம்
புளியந்தோப்பு பன்னடுக்கு குடியிருப்பைக் கட்டிக் கொடுத்தது பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம். கொங்கு நாடு கல்விக் குழுமத்தின் பொருளாளராக இருக்கும் தென்னரசு என்பவர் இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்து வருகிறார்.
புளியந்தோப்பில் புகாருக்கு உள்ளாகியுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் கட்டிவரும் பல இடங்களிலும் தரமற்ற முறையில் கட்டுமானப் பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பி.எஸ்.டி கட்டுமான நிறுவனமே திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது. 2020ல் ரூ.385 கோடி மதிப்பில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி பணிக்கு முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினர். இங்கும் தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
முன்னதாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் திரிமங்கலம் - தளவானூர் இடையே தென்பெண்ணை ஆற்றில் பி.எஸ்.டி நிறுவனத்தால் கட்டப்பட்ட தடுப்பணை நான்கே மாதங்களில் கடந்த ஜனவரி மாதமே உடைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே ஒரத்தூர் - ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியிலும் அடித்தளம் தரமில்லாமல் அமைத்துள்லதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பி.எஸ்.டி நிறுவனம் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தரமற்ற கட்டிடங்களை கட்டிய துறைக்கு அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீதும் வழக்கு தொடர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிறுவனம் மட்டும் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.




No comments
Thank you for your comments