Breaking News

அரசியல் காழ்ப்புணர்ச்சி-திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்.. பதிலடி கொடுத்த முதலமைச்சர்

 சென்னை:  

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

சட்டப்பேரவையில்   2021 – 2022ம் ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

விழுப்புரத்தில் அமையும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டசபையில் அறிவித்தார்.

கூட்டத்தொடரில் இன்று அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் பேசும்போது,  

‛விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது,' எனக் குற்றம்சாட்டினார். 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்று விளக்கம் அளித்தார். 

மேலும், தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் அதே பெயரில் இருந்திருக்காது  என்று தெரிவித்தார்.  எந்த காழ்ப்புணர்ச்சியும் இந்த அரசுக்கு கிடையாது.  

ஏன் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம் நீக்கப்பட்டது என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 

எனவே தயவுசெய்து காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டோம் என்பதை நீங்கள் மறந்து விடுங்கள். அப்படி எதுவும் இல்லை.. இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.

அதிமுக வெளிநடப்பு

இதையடுத்து இந்த அறிவிப்பை கண்டித்து சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.


பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்று கல்வித்துறை மானிய கோரிக்கை மீது அதிமுக உறுப்பினர் அன்பழகன் உரையாற்றினார். அப்போது ஜெயலலிதா பெயரில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பல்வேறு பள்ளிகளின் தரத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா. 

கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 

இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டனர். ஜெயலலிதா பெயர் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைக்கப்படுகிறது.

நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இதை செய்துள்ளனர். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். 

காழ்ப்புணர்ச்சி இருந்தால் அம்மா உணவகத்தை மூடி இருப்போமே என்று ஸ்டாலின் பேசியுள்ளாரே என்ற நிருபர்கள் கேள்விக்கு, 

அம்மா உணவகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஏழை எளியவர்கள் அடித்தட்டு மக்கள் பயன் பெறுவதற்காக தாயுள்ளத்தோடு தொடங்கப்பட்டது. அதை மூடுவதாக ஸ்டாலின் கூறியுள்ளது ஏழை மக்களுக்கு எதிரானது என்பதாகதான் தெரிகிறது .

இவ்வாறு  எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.


No comments

Thank you for your comments