ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தமா? முடக்கமா? கேள்வி எழுப்பும் நெட்டீசன்கள்
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை அக்கட்சி தலைமை ட்வீட் செய்துள்ளது.
டெல்லியில் கடந்த 1ம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் அவசர அவசரமாக தகனம் செய்ய வைக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை ராகுல் காந்தி தனது காரில் உட்கார வைத்து ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
அந்த ட்வீட்டில் அவர் கூறுகையில், இந்த பெற்றோர் கேட்பதெல்லாம் ஒன்றுதான். சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக இந்த ராகுல் காந்தி துணை நிற்பேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியுலகிற்கு காண்பித்ததாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. டிவிட்டர் நிறுவனம் இதையடுத்து சம்பந்தப்பட்ட ராகுலின் ட்வீட்டை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது.
The account has been temporarily locked. https://t.co/MYqpC8OeIb
— Congress (@INCIndia) August 7, 2021
இந்நிலையில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்படவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து சேவையாற்றுவார். அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் மறுசீரமைப்பிறகு உரிய செயல்முறை பின்பற்றப்படுகிறது. அதுவரை அவர் தனது மற்ற சமூக வலைதளங்களில் உங்களுடன் தொடர்பில் இருப்பார். கோரிக்கை நமது மக்களுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்பார். அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார். ஜெய் ஹிந்த் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா இல்லை ஹேக் செய்யப்பட்டதா என்றும் அவரது கணக்கு இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதே என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

No comments
Thank you for your comments