Breaking News

விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற "தேசிய விளையாட்டுத் தினத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (29-8-2021) வழங்கினார்.


 உலக அரங்கில் விளையாட்டுத் துறையில், ஹாக்கி விளையாட்டில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டுத் தினம் இன்று (29.08.2021) சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் 15 பேருக்குச் சீருடைத் தொகுப்புகள் மற்றும் குத்துசண்டை, கால்பந்து, தடகள வீரர் - வீராங்கனைகள் 100 பேருக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடைகளை வழங்கினார்.

இந்த விழாவில்  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றும் போது கூறியதாவது:

இந்தியத் துணைக்கண்டத்தின் தலைசிறந்த அரசியல் வித்தகர், சமூகநீதிக்  காவலர், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்திட சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி நல்லாட்சியினை நடத்தி வருகிறார்.  குறிப்பாக விளையாட்டிலும், உடல் ஆரோக்கியத்திலும், ஆர்வமும், அக்கறையும் கொண்ட முதல்வர் அவர்கள் விளையாட்டுத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

லட்சக்கணக்கானப்  இளைஞர்களின் கனவு ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கம் வெல்லவேண்டும் என்பதுதான். தமிழகத்திலுள்ள கிராம, நகர்ப்புற மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கவேண்டும், தமிழகத்திலிருந்து தலைசிறந்த சர்வதேசத் தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கிட வேண்டும் என்ற வகையில் விளையாட்டுத்துறைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்   கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளார்கள் - எனக் கூறினார் .


இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்  சிறப்புரையாற்றும் போது கூறியதாவது :-

சர்வதேசப் போட்டியான ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட்டில் இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே 1928, 1932 மற்றும்  1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை ஹாக்கி விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர் மேஜர் தயான் சந்த் அவர்கள்.

இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது 1956ஆம் ஆண்டு அரசால் இவருக்கு வழங்கப்பட்டது.  அவரது புகழினை மக்கள் அனைவரும் அறிகின்ற வகையில் இளைஞர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தினை ஏற்படுத்துகின்ற வண்ணம் அவரது பிறந்த நாள் "தேசிய விளையாட்டுத் தினமாகக்" கொண்டாடப்படுகிறது .

முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் குக்கிராமத்திலுள்ள சிறப்பாக விளையாடும் வீரர்களின் திறமையைக் கண்டறிந்து பன்னாட்டு வசதியுடன் கூடிய பயிற்சிகளை அளித்திடவும் அறிவியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு  வீரர் - வீராங்கனைகளைச் சர்வதேச அளவில் பதக்கங்களைப் பெற உற்சாகப் படுத்தி  வருகிறார்கள் எனக் கூறினார்.

முன்னதாக  விழாவினையொட்டி ஏராளமான வீரர் - வீராங்கனைகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டத்தினைச் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்  திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார் .

மேலும் சர்வதேச அளவில் சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் யோகா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் தங்கப்பதக்கம் வென்ற சீர்காழியைச் சேர்ந்த சுபானு அவர்களின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னைப் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,  எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்.பரந்தாமன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர். அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலர் / உறுப்பினர் செயலர்.ரமேஷ் சந்த் மீனா அவர்கள், அர்ஜீனா விருது பெற்ற நீச்சல் வீரர்.குற்றாலீஸ்வரன் மற்றும் அரசு உயர் அலுவர்கள் கலந்து கொண்டனர்.   



No comments

Thank you for your comments