Breaking News

மாணவர்களின் சுயவிவர தகவல்களை விற்பனை செய்யும் தனியார் பள்ளிகள்!

வேலூர், ஆக.11-

வேலூரில் உள்ள தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் சுயவிவர தகவல்கள் மற்றும் செல்போன் எண்களை பணத்துக்காக ஆசைப்பட்டு விற்பனை செய்து வருகின்றன. கல்வித்துறை இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.



வேலூர் மாவட்டம் என்றாலே அனைத்திலும் சற்று வித்தியாசமாகத்தான் காணப்படும். குறிப்பாக கல்வித்துறையில் செயல்படும் விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு அதன் செயல்பாடு அமைந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால் பள்ளிகள் நடைபெறுவதில் தொடர்ந்து முட்டுக் கட்டை விழுந்து கொண்டே போகிறது. 

விரைவில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் பிளஸ் 2 தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றவர்களாக அனைவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்ற மாணவ, மாணவிகளின் செல்போன் எண், அவர்களது பெற்றோர்களின் செல்போன் எண்களை சேகரிப்பதில் தனியார் பயிற்சி மையங்களான ஜேஇஇ, நீட் போன்றவைகள் முழுவீச்சில் களம் இறங்கி இதற்காக பணியாளர்களை நியமனம் செய்து சத்தமின்றி வேலைபார்த்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளை அந்த குழுவினர் அணுகி மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களை சேகரித்து வருகின்றனர். இதற்காக ஒரு மாணவன் மற்றும் மாணவியின் செல்போன் எண்ணை பெறுவதற்காக குறிப்பிட்ட தொகை செலுத்துகின்றனராம்.

இதனால் இதுபோன்ற அர்ப்ப பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த தனியார் பள்ளிகளும் ரகசியமாக வைக்க வேண்டிய செல்போன் எண்களை அந்த தனியார் மையங்களிடம் விற்பனை செய்து கல்லா கட்டி வருகின்றனர். 

செல்போன் எண்களை பெற்றுக்கொண்ட அதுபோன்ற தனியார் பயிற்சி மையங்களை சேர்ந்த டெலிகாலர்கள் குறிப்பிட்ட மாணவனையோ, மாணவியையோ அல்லது அவர்களின் பெற்றோர்களையோ தொடர்பு கொண்டு உங்கள் மகனை (அ) மகளை எங்கள் பயிற்சி மையத்தில் சேருங்கள். நாங்கள் பயிற்சி அளிக்கிறோம் என்று பேசி தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இது ஆரோக்கியமான செயல் அல்ல. 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக கொடுத்த செல்போன் எண்களை ரகசியமாக பாதுகாக்காமல் வந்த வரைக்கும் விற்பனை செய்து விடுகின்றனர். இதுபோன்ற செயல் கடந்த 3 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் அரங்கேறி வருகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கல்வித்துறையும் இதுபோன்ற நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்து தனியார் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையோ அல்லது உத்தரவோ பிறப்பிக்க வேண்டும் என்றும் இதுபோன்ற அழைப்புகளால் பாதிக்கப்படும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சத்தமின்றி இப்படி கல்லா கட்டிவரும் தனியார் பள்ளிகளை அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ள பல பெற்றோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 

அந்த மாணவன் குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் சேரும் வரையில் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துக் கொண்டே உள்ளனர் அந்த தனியார் பயிற்சி மைய நிர்வாகத்தினர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அவர்கள் அவர்களுடைய பணியை தொய்வின்றி பார்த்து வருகின்றனர். ஒரு மாணவருக்கு தலா ரூ.80 ஆயிரம் வரை பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் ரூ.85 ஆயிரம் பெற்றுக் கொள்வது என்பது எவ்வளவு லாபம் என்று கணக்கிட்டால் தெரிந்து கொள்ளலாம். 

பெற்றோர் ஒருவர் தனக்கு வந்த அலைபேசியில் எங்களுக்கு அவ்வளவு வசதி இல்லை என்று கூறியதற்கு, பெற்றோரின் தொழில் மற்றும் வருமானம் வரை கூறி அலைபேசியில் பேசியுள்ளனர் பயிற்சி மையத்தினர்.  

தனியார் பள்ளிகள் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களின் முழு சுயவிவரத்தை பயிற்சி மையம் போன்றவற்றிற்கு விற்பனை செய்வது தற்போது அம்பலமாகி உள்ளது.

அரசு நிரிணயிக்கும் கட்டணத்தை வசூலிப்பதில்லை, அரசு உத்தரவு காற்றோடு போச்சு என்ற நிலையில், நோட்டு புத்தகம், சீருடை, செருப்பு என அனைத்து விற்பனை செய்து வரி ஏய்ப்பு செய்கின்றனர். இதுபோதாது, என்று மாணவர்களின் சுயவிவரத்தை விற்பனை செய்து லாபம் பார்ப்பது சரியா என்ற மிகப்பெரிய கேள்வியே....

இது சட்ட விரோத செயலாகும். இதற்கு நிரந்தர திர்வு காண பள்ளிக் கல்வித்துறை முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. பள்ளி கல்வித்துறையின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Thank you for your comments