Breaking News

சிறு குறு தொழில்களுக்கு கடன் வழங்க தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க நடவடிக்கை – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை:

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு கடன் வழங்குவதற்காக தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள இந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி, கட்டமைப்பு, இதர சிக்கல்களை ஆய்வு செய்வதற்கும், இந்நிறுவனங்கள் வளர்ச்சி அடைய தேவைப்படும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கவும், டாக்டர்.ந.சுந்தரதேவன் இ.ஆ.ப (ஓய்வு) அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.



மாநில அளவிலான கடன் உத்தரவாதத் திட்டத்தை, குறிப்பாக குறு தொழில் நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் வணிகத் திறனின் அடிப்படையில் நிதி நிறுவனங்களும் நவீன நிதி தொழில்நுட்ப நிறுவனங்களும் கடன் வழங்கிட ஏதுவாக, மின்னணு தகவல் தரவுகள் அடிப்படையிலான கடன் மதிப்பீட்டு முறை ஏற்படுத்தப்படும். இந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பங்குச் சந்தைகள் மூலம் முதலீட்டைப் பெற முயலும் இந்நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்து, 30 இலட்சம் ரூபாய் வரை பட்டியல் இடும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்.

முதலமைச்சர் அவர்களின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு கடன் அளித்தவர்கள் தங்களது கடன்களை மறு கட்டமைப்பு செய்ய முன்வந்தால், அரசு கடன் உத்தரவாதத்துடன் நிதி நிறுவனங்களின் உதவியுடன் கடன் வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களின் நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிப்பதற்கான வழிவகைகளை உறுதி செய்வதற்கான வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடித் தளங்களின் கீழ் (TReDS), அனைத்து மாநில பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் கொண்டு வரப்படும்.

ஐந்து பெரிய தொழிற் தொகுப்புகளை மருந்து மற்றும் பெட்ரோ இரசாயனங்கள் துறையிலும், துல்லியமான உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து (Smart mobility) ஆகிய துறைகளிலும் 100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.

265 ஏக்கர் மொத்தப் பரப்பளவில் 5 இடங்களில் நில வங்கிகளை சிட்கோ நிறுவ உள்ளது. சிட்கோ தொழில்துறை பூங்காக்களில், விற்கப்படாத மனைகளை விரைவாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்காக விலைக் கொள்கை சீரமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

திருத்த வரவு செலவுத்திட்டத்தை முழுமையாகக் காண  சொடுக்கவும்

CLICK 👉   BUDGET_SPEECH_PTR_2021_22

No comments

Thank you for your comments