Breaking News

புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்.... அதிமுக, பாஜக வெளிநடப்பு

சென்னை:

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய விவரம்:

தன்னிச்சையாக ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாச்சி தத்தவத்திற்கு எதிரானது. அதனால் தான் இந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியுள்ளது.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும் உழவர்களுக்கு எதிரானது தான். இந்த நாட்டில் இருந்து விவசாயிகள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் நெற்றி வியர்வை சிந்தி உழைக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை.

குறைந்தபட்ச ஆதாய விலை என்பது குறைந்த பட்சம் வாய் வார்த்தைக்குக்கூட கிடைக்காத சட்டங்கள் தான் இச்சட்டங்கள் என்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அதிமுகவின் நிலை என்ன என அவையில் கேட்டபோது,

"நதியினில் வெள்ளம்; கரையினில் நெருப்பு; இரண்டுக்கும் நடுவே இறைவன் சிரிப்பு. இதுவே என் நிலை": வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின்போது சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.

பின்னர், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் நால்வர் முதலில் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையிலிருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்,

வேளாண் பெருமக்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வேளாண் சட்டங்களை இயற்றியது. அவர்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்றார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை 2020ம் ஆண்டு  செப்டம்பர் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அந்த 3 சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை ஒரு வார காலத்தில் செப்டம்பர் 27ம் தேதி வழங்கினார்.

எல்லா எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களை கடுமையாக எதிர்த்தன.  விவசாயிகள் அந்த சட்டங்களை எதித்துப் போராட டெல்லிக்கு வரவிரும்பினார்கள். விவசாயிகளை போலீசார் டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்தினார்கள். அதனால் டெல்லி எல்லையிலேயே தங்கி கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். ஆனால் எக்காரணம் கொண்டும் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற மாட்டாது என்று மத்திய அரசும் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


No comments

Thank you for your comments