Breaking News

மசோதாக்கள் நிறைவேற்றம்- எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி:

மக்களவையில் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் மசோதாக்களை அறிமுகம் செய்வதற்கும், நிறைவேற்றுவதற்கும்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தோசை சுடுவது போல் 10 நிமிடங்களில் மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புரட்சிகர சோசலிச கட்சி உறுப்பினர் என்.கே.பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.



பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் ஆகிய பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி உள்ளன. இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில், மக்களவையில் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் மசோதாக்களை அறிமுகம் செய்வதற்கும், நிறைவேற்றுவதற்கும்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மணீஷ் திவாரி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினர். அவை ஒழுங்காக நடைபெறாத நிலையில் அரசாங்கம் மசோதாக்களை நிறைவேற்றுவதன்மூலம், ஜனநாயகம்  படுகொலை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினர். அரசியலமைப்பு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

தோசை சுடுவது போல் 10 நிமிடங்களில் மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புரட்சிகர சோசலிச கட்சி உறுப்பினர் என்.கே.பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த அரசு விரும்புகிறது என்றும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினால் விவாதத்தை தொடங்க முடியும் என்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். ஆனால், பெகாசஸ் விவகாரம் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர்.

No comments

Thank you for your comments