Breaking News

திமுக ஆட்சிக்காலத்திலும் கடன் சுமை இருந்தது - இபிஎஸ் குற்றச்சாட்டு

சேலம்:

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதி சீர்கேடு நடைபெற்றதாக கூறுவது முற்றிலும் தவறு.  திமுக ஆட்சிக்காலத்திலும் கடன் சுமை இருந்தது  என்று தமிழக சட்டசபை எதிர்கட்சித்தலைவரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 



தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வெளியிட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறியுள்ளார். 

தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை 20 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு மே மாதம் வரை அதிமுக ஆட்சியில் இருந்தது.   கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் நிதிநிலை மோசமாக இருந்ததாகவும் கடன் அளவு அதிகரித்துள்ளதாகவும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம் சாட்டியது. 

திமுக ஆட்சி அமைத்தால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.   நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைமையிலான ஆட்சி தற்போது அமைந்துள்ளது. திமுக அரசின் நிதித்துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றார். 

கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசின் நிதி நிலை குறித்து ஆகஸ்ட் மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.  அதன்படி இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்கும் போதே கடன் சுமை இருந்ததாக கூறினார். 

2006 -2011ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் கடன் சுமை அதிகமாகவே இருந்ததாகவும் தெரிவித்தார்.   அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதி சீர்கேடு நடைபெற்றதாக கூறுவது முற்றிலும் தவறு என்று கூறிய எடப்பாடி பழினிச்சாமி, மின்சார சாதனங்கள் விலை உயர்ந்தாலும் மின்கட்டணங்கள் உயர்த்தப்பட வில்லை என்று கூறினார். 

இதேபோல டீசல் விலை உயர்வு ஏற்பட்டாலும் போக்குவரத்து கட்டணங்கள் விலை உயர்த்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். 

திமுக ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள் அது என்னவானது என்று கேள்வி எழுப்பினார். 

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.


No comments

Thank you for your comments