Breaking News

அமெரிக்காவில் மேலும் ஒரு முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி நபர் நியமனம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வக்கீலான ரஷாத் உசேன் (Rashad Hussain) என்பவரை சர்வதேச மத சுதந்திரத்துக்கான தூதராக நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தில் இந்திய வம்சா வழியினர் பல்வேறு உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வக்கீலான ரஷாத் உசேன் என்பவரை ஜனாதிபதி ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். இதன் மூலம் இந்த உயர் பதவி வகிக்கும் முதல் முஸ்லிம் நபர் என்கிற பெருமையை ரஷாத் உசேன் பெறுகிறார்.

41 வயதான ரஷாத் உசேன் தற்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டாண்மை மற்றும் உலகளாவிய ஈடுபாட்டிற்கான இயக்குனராக பதவி வகித்து வருகிறார்.

இவரது நியமனம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் “இன்றைய அறிவிப்பு அமெரிக்காவைப் போல தோற்றமளிக்கும் மற்றும் அனைத்து மத மக்களையும் பிரதிபலிக்கும் ஒரு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது. சர்வதேச மத சுதந்திரத்துக்கான தூதராக பணியாற்ற நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் ரஷாத் உசேன் ஆவார்” என கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் போது ரஷாத் உசேன் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராகவும், மூலோபாய எதிர்ப்பு பயங்கரவாத தொடர்புகளுக்கான சிறப்பு தூதராகவும், வெள்ளை மாளிகையின் இணை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments

Thank you for your comments