Breaking News

"அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு முகாம்

வேலூர், ஆக.26-

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், வேலூர் கோட்டத்தின் மூலம் PMAY (Urban) HFA (Housing For All) "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் (AHP)  வேலூர் மாவட்டம், குளவிமேடு திட்டப்பகுதியில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகளில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை மறு குடியமர்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும், மேலும் நகர்புற வீடற்ற ஏழைகளுக்கும் (பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கு) வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள பயனாளிகளின் பங்குத்தொகையான ரூ.1,80,000/- (ரூபாய் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) பயனாளிகள் செலுத்த வேண்டும். மேலும்  "அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி, மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு குளவிமேடு திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர், கீழ்க்கண்டவாறு சான்றளிக்கவேண்டும். 1) இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை என்றும் 2) எனது மாத வருமானம் ரூ.25,000/& க்குள் உள்ளது என்றும் சான்றளிக்க வேண்டும்.

பயனடைய  விரும்பும் பயனாளிகள் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலக எண்.22, 9வது தெரு, கோபாலபுரம், கழிஞ்சூர், வேலூர்-632 006 என்ற முகவரியில் 31.08.2021 அன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments