காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். திண்டிவனம் ராமமூர்த்தி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் மலரஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(84) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது . திண்டிவனம் ராமமூர்த்தி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திண்டிவனம் ராமமூர்த்தி 1984 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினர், 1981 முதல் 1984 வரை பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸின் தமிழக தலைவராகவும் இருந்துள்ளார்.
பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். சில மாதங்களிலேயே கட்சியை கலைத்துவிட்டு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி அறிக்கையில்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து- அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தமிழ்நாட்டிற்குப் பெரும் பெருமை சேர்த்தவர்.
மறைந்த பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர். தமிழ்நாட்டு நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் பாடுபட்டுப் பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த அவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர்..திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.


No comments
Thank you for your comments