Breaking News

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறிப்பு!

வேலூர், ஆக.5-

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் எவ்வித தொடர்பும் இல்லாமல் ஒரு தனி நபர் பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறித்து வருகிறார். இதை தடுக்க வேண்டிய வருவாய்த்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்க்கின்ற நிலை தொடர்ந்து நிலவுகிறது.


அணைக்கட்டு தாலுகா அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் நாடி வருகின்றனர். இப்படி நாடி வரும் பொதுமக்களை வெளியில் நின்றவாறு மடக்கி மிரட்டி சம்பத் என்பவர் பணத்தை பறித்து கொண்டு என்னால் மட்டுமே இங்கு எந்த பணியாக இருந்தாலும் முடித்து தர இயலும். நீங்கள் நேரடியாக சென்றால் வேலை முடியாது என்று கூறி பணத்தை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாரி குவித்து வருகிறார். 

இதுகுறித்து சம்பத்தால் பாதிக்கப்பட்ட பல பொதுமக்கள் பணத்தை மிரட்டி எங்களிடம் இருந்து பறிக்கும் பணியில் ஈடுபடுகிறார். இவர் யார்? இவர் ஏன் தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் நின்று கொண்டு யார் உள்ளே வந்தாலும், உனக்கு என்ன வேலை முடித்து தர வேண்டும் என்று ஏதோ முன் பின் தெரிந்தவர் போன்று பேச்சுக் கொடுத்து பணத்தை கறந்து விடுகிறாராம். 

இப்படி இவர் எடுத்து செல்லும் பணிகளை தாலுகா அலுவலகத்தில் பணிபுரிவோர் முடித்தும் தந்து விடுகிறார்களாம். இவரை பார்த்தால் வருவாய்த்துறையினரே பயப்படுகின்றனராம். இதுகுறித்த புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

பொதுமக்களில் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை என்னவோ மந்தகதியில் உள்ளதாம். சம்பத் என்பவருக்கு தாலுகா அலுவலகத்தில் என்ன வேலை?. இவர் புரோக்கரா என்பதும் புலப்படவில்லையாம். இவரே வலிய வந்து பொதுமக்களிடம் பணத்தை கறந்து விட்டு பணியை முடித்து கொடுத்து அனுப்பி வைக்கிறாராம். இவர் கொண்டு செல்லும் பணிகளை வருவாய்த்துறையினர் முடித்து தருவதுதான் சம்பத்தின் பலம். 

இவரைப் பார்த்து வருவாய்த்துறையினர் பயப்பட காரணம் என்னவென்பது புரியாத புதிராக உள்ளது. விரைவில் சம்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவரது நடவடிக்கைகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதும், தாங்கள் சுதந்திரமாக தாலுகா அலுவலகத்துக்கு வந்து பணிகளை முடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அணைக்கட்டு வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் இதுபோன்ற சமூக விரோதிகளுக்கு தாலுகா அலுவலகத்தில் அடைக்கலம் தராமல் பொதுமக்கள் இடையூறின்றி வந்து செல்ல வழிவகை செய்ய முன்வருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Thank you for your comments