14 லட்சம் கையாடல்.... கோயில் செயல் அலுவலர் பணி இடைநீக்கம்
காஞ்சிபுரம்:
14 லட்சம் கையாடல் செய்த விவகாரம் வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் பணி இடைநீக்கம் செய்து ஆணையர் அதிரடி உத்தரவு.!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு முதல்நிலை செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் சிந்துமதி.
இவர் ஒரு தற்காலிக ஊழியரின் பெயரில் காசோலை எடுத்து கோயில் நிதியை முறைகேடாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ஆணையரின் அனுமதியின்றி கோயில் வருமானத்தில் கார் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொதுமக்கள் தரப்பில் எழுந்தன.
இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பெயரில் மண்டல தணிக்கை அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர்.
இதில் தற்காலிக ஊழியரின் காசோலை வாயிலாக 14 லட்சம் வரை கையாடல் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த செலவை பலவகை ரசீதுகளில் பதிவு செய்ததும் கோயில் நிதியில் தேவையற்ற செலவுகள் செய்ததும் தெரியவந்தது.
இது குறித்து அறிக்கை தயார் செய்து ஆணையருக்கு அனுப்பப்பட்டது குழுவினர் அளித்த அறிக்கையின்படி முதல்நிலை செயல் அலுவலர் சிந்துமதியை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் குமரகுரு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவருக்கு பதிலாக சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் செயல் அலுவலரிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முதல்நிலை செயல் அலுவலர் சிந்துமதி செய்துள்ள வரவு செலவு விவரங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது இதில் கோடிக்கணக்கில் அவர் முறைகேடாக செலவு செய்து இருப்பதாக அறநிலை துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே செயல் அலுவலர் சிந்து மதி இதற்கு முன்பு பணியாற்றிய கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments