Breaking News

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை:

நிதி சுமையில் இருந்தாலும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும்  எண்ணம் தற்போது இல்லை தேவையற்ற செலவுகளை குறைத்து வருகிறோம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில், 23 மாநகரப் பேருந்துகள் இயக்கத்தினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். 


கடந்த ஆட்சியில் ஒருசில வழித்தடங்களில் இயக்கப்பட்ட சென்னை புறநகர் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. பயணிகள் கூட்டம் இல்லாததால், நஷ்டம் ஏற்பட்டதால் பஸ்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.  இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நகருக்கு வரக்கூடிய மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்க கூடுதலாக புதிய வழித்தடங்களிலும் பஸ்களை இயக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன், சேகர் பாபு ஆகியோரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.

அதன் அடிப்படையில் புதிய வழித்தடங்களில் மட்டுமின்றி ஏற்கனவே நிறுத்தப்பட்ட பஸ்களையும் இயக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், சென்னையில்  30 பஸ் போக்குவரத்து புதியதாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் இருந்து 23 பஸ் சேவையும், வடசென்னையில் இருந்து 7 பஸ் சேவையும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.  அப்போது புதிய வழித்தடத்தில் அமைச்சர்கள் இருவரும் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். 

அப்போது  அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பாக பேசும் போது உப்பு திண்ணவர் தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும். தவறு செய்தால் தண்டனை நிச்சயம். இதற்கு மற்றவர்களை குறைந்து பேச கூடாது. 

பொதுமக்களின் நன்மையை கருதி, முதல்வர் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். அதிமுகவினர் கடந்த ஆட்சி காலத்தில், மோசமான நிர்வாகத்தை நடத்திவிட்டு நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள் என்றார்.

அதைதொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, 

தமிழகத்தில் 40% பெண்கள் பயன்படுவர் என்ற அடிப்படையில்  இலவச பேருந்து பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது 61% பெண்களுக்கு  இத்திட்டம் பயன்படுகிறது. 

இதுவரை 9.20 கோடி பெண்கள் இலவச பயணம் மூலம் பயனடைந்து உள்ளனர். நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். இதனால் கூடுதலாக 150 கோடி நிதி ஒதுக்க வேண்டியுள்ளது.

அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக கடன் சுமை ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் சென்றாலும், திமுக அரசு மக்கள் நலனில் அக்கறையோடு  செயல்பட்டு வருகிறது.  

நிதி சுமையில் இருந்தாலும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும்  எண்ணம் தற்போது இல்லை தேவையற்ற செலவுகளை குறைத்து வருகிறோம் .

திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை புது பொலிவு பெரும். ஜெர்மனி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, அதன்படி பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு,  விரைவில் 2500 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றார். 

பேருந்து நிலையங்களில் விற்கப்பட்ட அம்மா குடிநீர் மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் இந்த ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments