Breaking News

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்- முதலமைச்சர் உட்பட தலைவர்கள் வாழ்த்து

 சென்னை:

தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்தார். 

ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள பாஜக தலைவர் இல. கணேசனுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி,  ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்தார்.

மணிப்பூர் ஆளுநராக 24.7.2019-ல் நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார். கடந்த 10ம் தேதி முதல் அவர் விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.  இந்நிலையில் இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இல.கணேசன் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது அண்ணனின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வருகிறார். இளம் வயதிலேயே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார்.

பா.ஜனதா தொடங்கப்பட்டது முதல் கட்சி பணியில் ஈடுபட்டார். 1991-ல் பா.ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அகில இந்திய செயலாளர், அகில இந்திய துணை தலைவர் பொறுப்புகளையும் வகித்தார். அதன் பிறகு தமிழக பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டார். 2009, 2014 பாராளுமன்ற தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2016-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அந்த பதவியை ஒரு ஆண்டு வகித்தார். தற்போது கட்சியின் தேசிய குழு உறுப்பினராக இருக்கிறார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பது பற்றி இல.கணேசன் கூறியதாவது:-

வடகிழக்கு மாநில மக்களுக்கு சேவை செய்ய மகிழ்ச்சியுடன் செல்கிறேன். இந்த வாய்ப்பை தந்த குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இல.கணேசனை போனில் தொடர்பு கொண்டு மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, 

மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்! என்று சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு முதலமைச்சர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் போனில் தொடர்பு கொண்டு இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை 

இல.கணேசனுக்கு தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜனதாவின் மூத்த தலைவரும் நான் பெரிதும் போற்றும் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை

இதேபோல் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தேசியவாதியும் ஆன்மிகவாதியுமான இல.கணேசனுக்கு இப்பதவி வழங்கப்பட்டு இருப்பது 8 கோடி தமிழர்களுக்கும் வழங்கப்பட்ட அங்கீகாரமாக கருதுகிறேன். அவரது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து

மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, 

”மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

No comments

Thank you for your comments