Breaking News

தனியார் பள்ளியை மிஞ்சும் காஞ்சிபுரம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி ... தலைமை ஆசிரியர் மாலதியை போற்றும் பெற்றோர்...

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநர் அரசினர் மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு கல்வித் தரம் உச்சத்தை நோக்கி செல்கிறது.  இதற்கு முழு காரணம் இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மாலதி தான் என்று மாணவர்களின் பெற்றோர் கூறுவதை கேட்க முடிகிறது.

பள்ளியின் அமைவிடம்:  

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்டது பெருநகர் ஊராட்சி. இது காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 4 ஆயிரம் பேர் வசித்து வருகி்ன்றனர். இங்கு அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு கடந்த 2017ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாலதி என்பவர் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றார்.இப்பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் 32 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றண(32 CCTV CAMERA). 



பள்ளியின் கட்டமைப்பு: 

அன்று முதல் தான் இப்பள்ளிக்கு விடிவு காலம் பிறந்தது. முதலில் பள்ளியின் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என, முடிவு செய்தார். இதற்கு தேவையான நிதியை எந்தெந்த துறைகள் மூலம் பெறவேண்டும் என ஆலோசித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து நிதியை கொண்டு வந்தார் தலைமை ஆசிரியை மாலதி. பழைய கட்டடங்கள் அப்புறப்படுத்திவிட்டு, புதிய கட்டடங்களை கட்டினார். சில கட்டடங்களை புதுப்பித்தார். பிரமிக்க வைக்கும் வண்ணங்களையும் தீட்டினார். 

10 சதவீதம் கூடுதல் தேர்ச்சி:

பள்ளி முழுவதும் தனியார் கட்டடங்கள் போல் ஜொலித்தது. மாணவ, மாணவிகள் சீருடைகளை இப்படிதான் அணிய வேண்டும் என, மாற்றத்தை ஏற்படுத்தினார். படிப்புக்கு முன்பு ஒழுக்கம் தான். ஒழுக்கமாக இருந்தால் படிப்பு தானாக வரும் என, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

மெல்லப் படிக்கும் மாணவர்கள், சுமாறாக படிக்கும் மாணவர்கள், நன்கு படிக்கும் மாணவர்கள் என, கண்டறிந்து, கூடுதல் கவனம் செலுத்தி அரையாண்டு தேர்வுக்கு முன்பு அனைத்து மாணவர்களும் நன்கு படிக்கும் அளவுக்கு தலைமை ஆசிரியரை மாலதி முயற்சியால், பள்ளியே வெற்றியை கண்டது. 

இதனால், 2017ம் ஆண்டே பெருநகர் அரசினர் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மாதிரி பள்ளியாக ‘அந்தஸ்து’ பெற்றது.. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் 10 சதவீதம் அதிகரித்தது.

எண்ணிக்கை இரட்டிப்பானது:

தலைமை ஆசிரியையாக மாலதி பொறுப்பேற்பதற்கு முன்பு இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 900 என, இருந்தது. பெருநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தலைமை ஆசிரியை மாலதி மற்றும் சக ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து, பள்ளியில் கற்பித்தல் முறை, மாணவர்களை படிக்க வைத்தல், ஒழுக்கத்தை சொல்லி கொடுப்பது போன்றவற்றை எடுத்துரைத்தனர். இதைக் கேட்ட பெற்றோர் பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியை பார்வையிட குவிந்தனர்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ள இந்த பள்ளி என, அறிந்து கொண்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்தனர். இதனால், இந்த பள்ளியில் தற்போதையே மொத்த மாணவ – மாணவிகளின் எண்ணிக்கை 1800 என, உயர்ந்துவிட்டது.. 

விளையாட்டிற்கும் முக்கியத்துவம்:

மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரவர் விருப்பத்திற்கேற்ப விளையாட்டை சொல்லிக் கொடுக்கின்றனர். மூன்று விளையாட்டு ஆசிரியர்கள் மூலம் பல்வேறு விளையாட்டும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. நடப்பாண்டு மாணவர்கள் பிரிவில் வாலிபால் போட்டி மண்டல அளவில் பங்கேற்றுள்ளன. எல்.கே.ஜி., வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்காக பள்ளி வளாகத்திலேயே பல்வேறு நவீன விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் வகுப்புகள் :

கொரொனா துவங்கியது முதல் இன்று வரையிலும் மாணவர்களின் பாடங்கள் பாதிக்ககூடாது என்பதற்காக ‘ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவரகளுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், அனைத்து பாடங்களும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தெரிந்து கொள்வதற்கு இந்த ‘ஆன்லைன்’ வகுப்புக்கள் பயனுள்ளதாக இருந்து வருகிறது..

தலைமை ஆசிரியைக்கு ‘விருது’:

கிராமபுற மாணவர்களுக்கான கல்வித் தரத்தை உயர்த்தி பெருநகர் அரசினர் மாதிரி மேல் நிலைப் பள்ளிக்கு ‘பெருமை’ சேர்த்தமைக்காக கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மாலதிக்கு ‘நல்லாசிரியர்’ விருது வழங்கப்பட்டது. அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, குடியரசு தினவிழாவில் தலைமை ஆசிரியை மாலதிக்கு பாராட்டு சான்று வழங்கி கவுரவித்தார்.

விஞ்ஞானிகளை உருவாக்கும் பள்ளி:

இப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் சர்வீன், கோகுல் ஆகிய இரண்டு மாணவர்களும் ஒன்றிணைந்து சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கு நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியை வாகனங்களில் பொருத்திவிட்டால் இந்த வாகனங்கள் விபத்தை சந்திப்பதற்கு முன்பே ‘அலாரம்’ சப்தம் ஏற்படுத்தும் இதைக்கொண்டு, டிரைவர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து, விபத்தை தவிர்க்கலாம். இந்த நவீன கருவிகளை கண்டுபிடித்துள்ள இந்த மாணவர்களுக்கு தனியார் அமைப்பு சார்பில் ‘இளம் விஞ்ஞானிகள்’ விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. இந்த மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகி்ன்றனர். 

விவசாயிகளில் பிள்ளைகள் முதலிடம்:

இந்த பள்ளியில் கடந்த ஆண்டு 182 மாணவ – மாணவிகள் 12ம் வகுப்பு படித்தனர். தமிழக அரசு சார்பில் ( பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள், பதினோராம் வகுப்பு மதிப்பெண்கள், 12ம் வகுப்பு செய்முறை தேர்வு ) ஆகிய மதிப்பெண்கள் அடிப்படையில், 12 மதிப்பெண்கள் வழங்கின. இப்பள்ளியை சேர்ந்த கூலி விவசாயின் மகள் எழிலரசி மற்றொரு கூலித் தொழிலாளியின் மகள் தீபிகா ஆகியோர் 600க்கு தலா 547 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்து பள்ளிக்கு பெருமைச் சேர்த்துள்ளனர். இதுதவிர 33 மாணவ – மாணவிகள் 500க்கு மேல் மதிப்பெண்ணை எடுத்துள்ளனர். கடந்தாண்டு இப்பள்ளியில் படித்த இருவர் மருத்துவத்தில் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில் எழிலரசி - தீபிகா ஆகிய இரு வருக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற வேண்டும்:

பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் மாலதி, கிராம மக்களே எதிர்பார்க்காத அளவுக்கு சாதனைகளை படைத்து வருகிறார். இங்கு பணிபுரியும் சக ஆசிரியைகளும் இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பணி செய்வதால், பள்ளி வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. தலைமை ஆசிரியை மாலதி இன்னும் 5 ஆண்டுகளுக்கு மேல் இதே பள்ளியில் பணியாற்ற வேண்டும். இந்த தலைமை ஆசிரியைக்கு ‘பணி மாறுதல்’ அளி்த்து எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடாது என, பெருநகர் மற்றும் சுற்றி உள்ள மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் தங்களது கருத்தை முன் வைத்துள்ளனர்.  

No comments

Thank you for your comments