Breaking News

திமுக அரசு மீது குற்றம் சாட்டி ...ஆளுநரை சந்தித்து அதிமுக புகார் மனு

சென்னை

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க அதிமுகவினர் மீது பொய் வழக்கு, ஊழல் குற்றச்சாட்டுகள் என திமுக அரசு செயல்பட்டு வருகிறது என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து இபிஎஸ், ஓபிஎஸ் இன்று புகார் மனு அளித்துள்ளனர். 

கொடநாடு விவகார வழக்கு விசாரணை மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வை சேர்ந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டில், அவர் மறைவுக்கு பிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.  மேலும் இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான சயான் ஜாமினில் வெளியே இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அப்போது முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன சில முக்கிய ஆவணங்களை அளித்தாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்  பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. 

இந்நிலையில் நேற்று (18.08.2021) சட்டசபை தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து இந்த விவகாரம் தொடர்பாக பேச முயன்றார். ஆனால், சபாநாயகர் அப்பாவு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோ‌ஷமிட்டதால், அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.  

பின்னர், பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘‘திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்னை பழிவாங்க பார்க்கிறார்கள். கொடநாடு வழக்கில் என் பெயரை சேர்க்க சதி செய்கிறார்கள்’’ என்று தி.மு.க. அரசை குற்றம்சாட்டினார்.

ஆளுநரை சந்தித்து புகார் மனு

இந்நிலையில்,  சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த அவர்கள்,  கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுக மீது பொய் வழக்கு போடுவதாகவும்,  தி.மு.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (19.08.2021) கோரிக்கை மனு அளித்தனர்.

ஆளுநருடனான சந்திப்பில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி, ஜெயக்குமார், அதிமுக சட்ட பாதுகாப்பு குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உடனிருந்தனர்.

பின்னர் எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், மற்ற உறுப்பினர்களும்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

திமுக அனைத்து துறை செயல்பாடுகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்து எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறது.

திமுக அரசின் 100 நாள் சாதனை என்பது வசூல் செய்ததுதான் எனக் குறிப்பிட்டார்.

எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வேண்டுமென்றே வழக்கு போட்டுள்ளனர், திமுகவின் 100 நாள் ஆட்சியில் மக்கள் வேதனையும், சோதனையும் தான் அடைந்துள்ளனர் என்றும்,

அதிமுக ஆட்சியில் துவங்கிய திட்டங்கள் வேண்டும் என்றே முடக்கி உள்ளனர்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை முடிவடைய இருக்கும் நிலையில் இருக்கு வழக்கை மீண்டு விசாரிக்கின்றனர்.

திமுக தேர்தல் அறிக்கைக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நேரடியாக அதிமுகவை சந்திக்க முடியாமல் குறுக்கு வழியில் இந்த வழக்கை திசை திருப்ப பார்க்கின்றனர் என்று குற்றம்சாட்டினார் எடப்பாடி கே. பழனிசாமி

ஆறுநரின் பதிலை பொறுத்து, அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திட்டமிட்டுள்ளனர்.

கொடநாடு விவகார வழக்கு விசாரணை மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments