Breaking News

தொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்

சென்னை :

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை ,தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி  மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26-8-2021) தாக்கல் செய்தார்.

தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது என வரவேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியுள்ளார்.

2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலைத் தொழிற்கல்விப்  படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் தொடர்பான சட்ட முன்வடிவினைச் சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, 

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்விப்  படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் தொடர்பான சட்ட முன்வடிவினை நான் இந்த அவையிலே  அறிமுகப்படுத்த விழைகிறேன்.

தொழிற்கல்விப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், நகர்ப்புறங்களிலுள்ள தனியார்ப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களைவிட, கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பயின்ற  மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கை பெறுவதைக் கருத்திலே கொண்டு, 1997ஆம் ஆண்டு, கிராமப்புறப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்குத் தொழிற்கல்விப் படிப்புகளில் 15 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.  முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குக் கல்விக் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டது.

கிராமப்புற மாணவர்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சிரமங்களைக் கருத்திலேகொண்டு, 2006ஆம் ஆண்டு,  தொழிற்கல்விப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு இரத்து செய்யப்பட்டு, 2007-2008 ஆம் ஆண்டு முதல் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக நமது மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுடன் போட்டியிட்டு, அவர்கள் விரும்பக்கூடிய உயர் கல்வியினைப் பெறுவதும், தொழிற்கல்விப் படிப்புகளில் சேருவதும் மிகவும் கடினமாக இருக்கிறது.    பல்வேறு சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பெறுவதில் சமவாய்ப்புக் கிடைக்கப்பெறவில்லை. 

ஏற்கெனவே, அரசுப் பள்ளியில் படித்த மாணாக்கர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தேசிய தகுதித் தேர்வில் (NEET) பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 7.5 விழுக்காடு  உள்ஒதுக்கீடு  வழங்கப்பட்டு வருகிறது.  மருத்துவப் படிப்பைப் போன்றே, கால்நடை மருத்துவம், வேளாண் கல்வி, பொறியியல், சட்டம் போன்ற இதரத் தொழிற்கல்விகளிலும், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருக்கிற காரணத்தால்,  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள், அத்தகைய மாணவர்கள் அனுபவித்த குறைபாடுகள் ஏதேனும் இருப்பின், மற்றும் பல்வேறு வகைகளிலான தொழிற்கல்விப் படிப்புகள், கல்வி நிறுவனங்களில் அவர்களின் முந்தைய சேர்க்கை தொடர்பான சிக்கல்களை ஆய்வுசெய்து மற்றும் அவர்களது குறைந்த பிரதிநிதித்துவத்திற்கு மேற்கூறப்பட்ட காரணங்கள் வழிவகுத்திருந்தால், அவர்களின்  பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்றத் தலைமை நீதிபதி,  நீதியரசர் திரு. த. முருகேசன்  அவர்களின் தலைமையில், மூத்த அலுவலர்களைக் கொண்ட ஓர் ஆணையமானது  அரசால் அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பலவகையான பள்ளிகளில் ஏறக்குறைய 1.3 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  2019-2020 கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 8.5 இலட்சம் ஆகும். அவர்களுள் 3.45 இலட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆவார்கள்.

பொறியியல் கல்வியில், 2020-2021 கல்வியாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 0.83 விழுக்காடு ஆகும். 

இதேபோன்று, அரசுப் பொறியியல் கல்லூரிகளில் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முறையே, 6.31 விழுக்காடு மற்றும் 0.44 விழுக்காடு மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர். 

மற்ற தொழிற்கல்விப் படிப்புகளான, கால்நடை மருத்துவப் படிப்பிலும் 2020-2021 கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் 3 விழுக்காடு மட்டுமே உள்ளது.  இது கடந்த ஆண்டுகளைக்காட்டிலும் குறைவு.  இதே நிலையே மீன்வளம் தொழிற்கல்விப் படிப்பிலும் நிலவுகிறது.

கடந்த ஆண்டில், 3.7 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களே இப்படிப்பில் சேர்ந்துள்ளனர். வேளாண்மை தொழிற்கல்விப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை 4.89 விழுக்காடாக உள்ளது. 

திருச்சிராப்பள்ளியிலுள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்திற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில்   நடைபெறுகிறது.  அதில், அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது.  இவ்வாறு தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களோடு போட்டியிட்டுச் சேர்க்கை பெறுவதில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.  ஏழ்மை நிலை, அறியாமை, போதிய வழிகாட்டுதல் இன்மை காரணமாக, அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் தொழிற்கல்விப் படிப்புகள் குறித்த விழிப்புணர்வினைக் குறைவாகப் பெற்றுள்ளனர். எனவே இதனை நன்கு ஆய்வுசெய்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தப் பல தீர்வுகளைப் பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல்,  தொழிற்கல்விப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காட்டிற்குக் குறையாமல் முன்னுரிமை வழங்கலாம் என ஆணையம்  பரிந்துரைத்துள்ளது.

ஏற்கனவே, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு  7.5 விழுக்காடு முன்னுரிமை வழங்கியுள்ளதுபோல, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், ஏழரை விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும் (மேசையைத் தட்டும் ஒலி) என முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான சட்டமுன்வடிவு இந்த அவையிலே கொண்டுவரப்பட்டுள்ளது.

பேரவைத் தலைவர் அவர்களே, 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் தொடர்பான சட்ட முன்வடிவினை அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

No comments

Thank you for your comments