வரலாற்றை திசை திருப்பும் திமுக... நான் கேட்குற 5 கேள்விக்கு பதில் சொல்லுமா... முன்னால் அமைச்சர் ஜெயகுமார்
சென்னை:
இட ஒதுக்கீடு விவகாரத்தில் சிறுதுரும்பையும் தூக்கி போடாதவர்கள் சொந்தம் கொண்டாடலாமா என்று திமுகவுக்கு மாஜி அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இடஒதுக்கீட்டிற்கு நாங்கதான் காரணம் என்று அதிமுகவும் சொல்கிறது. திமுகவும் சொல்கிறது. உண்மையில் இதற்கு யார்தான் காரணம்.?
உண்மையாக நாங்கள்தான் காரணம். வரலாற்றில் இட ஒதுக்கீடு என்று எடுத்துக்கொண்டாலே அது நாங்கள்தான். அதிமுக தான். நான் கேட்கும் 5 கேள்விகளுக்கு திமுக பதில் சொல்லவேண்டும்.
1980 ஆம் ஆண்டு 30% ஆக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு 50% ஆக ஒதுக்கியது யார்? திமுகவா...
எம்ஜிஆர்.... அதன் பிறகு 1990களில் மண்டல் கமிஷன் 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையை வழங்கிய போது அதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று சொன்னது எந்த அரசு...
அதிமுக அரசு.... அம்மாவுடைய அரசு (ஜெ.,) அன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றினார். தீர்மானத்தை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் 2018 ம் ஆண்டும் அதுபோல 2020 ஆம் ஆண்டும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதோடு, முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் டெல்லிக்குச் செல்லும்போது எல்லாம் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வற்புறுத்தியது அதிமுக ஆட்சி. அவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்தார்.
அதுபோல வழக்கையும் அதிமுக தான் போட்டது. அப்போதைய சட்ட அமைச்சர் சண்முகம் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்குத் தொடுத்த பின்புதான் மற்ற கட்சிகளும் அந்த வழக்கில் தங்களை இணைந்துகொண்டது. முதலில் அவர்கள் யாரும் வழக்குப் போடவில்லை. நாங்கள் வழக்குத் தொடுத்த பிறகு அவர்கள் வந்து இணைத்து கொண்டார்கள்.
அதற்கு அதன்பிறகு உயர்நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. அந்த குழுவில் மாநில அரசின் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டார். உமாநாத் ஐஏஎஸ் -குழு அறிக்கையை அளித்தது.
எங்களைப் பொறுத்தவரை அகில இந்திய அளவில் 27% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. சமூக நீதி என்றால் அது அதிமுக தான்.
69% இடஒதுக்கீட்டை 9வது அட்டவணையில் சேர்த்தது அதிமுக. இதற்குக் காரணம் மறைந்த முதல்வர் ஜெ.,
இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாத நிலையிலே நாங்கள் கொண்டு வந்த 27% மற்றும் 69%-ஐ சொந்தம் கொண்டாடுவது எப்படி.
வரலாற்றை திசை திருப்பி மக்களை ஏமாற்றுகின்றனர். இட ஒதுக்கீட்டை திமுக கொண்டுவந்ததுபோல ஒரு மாயதோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள்.
சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் உங்கள் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டுள்ளார்களே...?
கூட்டணிக் கட்சிகளுக்குள் பொதுவாகக் கொள்கைகள் மாறுபடும். எங்கள் கூட்டணியில் தொடர்ந்து அவர்கள் இருக்கும் நிலையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டது அவர்களின் கொள்கை முடிவு... அதில் நாங்கள் தலையிட முடியாது.

No comments
Thank you for your comments