Breaking News

ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 பேர் அடுத்தடுத்து தீ குளிக்க முயற்சி

தென்காசி:

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில மோசடி மற்றும் ஜீவனாம்சம் தொடர்பாக 3 குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாமைத் தொடர்ந்து  பொதுமக்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து வந்தனர். மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தங்களது மனுக்களை அலுவலக நுழைவு வாயிலில் இருக்கும் மனு பெட்டியில் மட்டுமே போட்டு செல்ல முடியும். 

இந்நிலையில் வால்பாறையை சேர்ந்த பெண் தனது கணவருடன் பிரிந்த பின் உரிய ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறப்படும் நிலையில் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி  தனம் என்ற பெண் தனது தாய் சரஸ்வதி, மற்றும்  2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம் முன்பு உடலில் மண் எண்னெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அவரை காவல்துறையினர் தடுத்தது நிறுத்தினர்.

இச்சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நிமிடங்களில் செங்கோட்டையை சேர்ந்த சின்னச்சாமி என்பவர் தனிப்பட்ட இடப் பிரச்சனை காரணமாக பல முறை மனு அளித்து நடவடிக்கை இல்லை என கூறி தன் மனைவியுடன் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதை பார்த்த காவல் துறையினர் அவரை தடுத்து காப்பாற்றினர். 

இந்த இரு சம்பவங்களும் நடந்த பரபரப்பு ஒய்வதற்குள் அடுத்தாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த வல்லம் முதலாளி குடியிருப்பு பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் இடப்பிரச்சனை காரணமாக பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி  தீக்குளிக்க முயற்சித்தார். அவரை காவல் துறையினர் காப்பாற்றினர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  அடுத்தடுத்து 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments