Breaking News

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம்- வெளியான அறிவிப்பு

சென்னை:

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு (23.8.2021 வரை)  நீட்டிக்கப்படுகிறது  என்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6-8-2021) அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16 ஆம்  தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது



இது குறித்து  முதலமைச்சர் மு.க.வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து  முதலமைச்சர் அவர்கள்  தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். 

பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.  

மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.  

அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில்  50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளார்.



No comments

Thank you for your comments