திரு.வி.க.வின் 138-ஆவது பிறந்தநாள் – அரசு சார்பில் மலர்தூவி மரியாதை
சென்னை
தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் திருவிக உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
திரு.வி.க. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மதுரவாயல் வட்டம், துண்டலம் கிராமம், செட்டியார் அகரம் திரு.வி.க.நூலகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர் திரு.க.கணபதி, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் செ.சரவணன், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் ஆகியோர் இன்று (26.08.2021) மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
திரு.வி.க. பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் 138-ஆவது பிறந்தநாள் இன்று!
தனித்தமிழ் மொழி நடையை மூச்சாகக் கொண்டவர். தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தந்தை பெரியாரை வைக்கம் வீரர் எனப் புகழ்ந்தவர்.
தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்கு உழைத்த திரு. வி.கலியாணசுந்தரனாரை என்றென்றும் போற்றுவோம்!
இவ்வாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments