Breaking News

ஆடி மாதம் ராசிப்பலன்கள்... சனியின் நேர் எதிர் பார்வையில் சூரியன், செவ்வாய்... சாதகமா? பாதகமா?

நவகிரகங்களின் ராஜாவாக திகழும் சூரியன்  சிவனின் அம்சம். சக்தியின் அம்சமான சந்திரனின் வீடான கடகத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அற்புத மாதம் தான் ஆடி மாதம்.

சூரியன் ஒருவரின் ஜாதகத்திலும், கோச்சார ரீதியாகவும் சிறப்பாக அமைந்துவிட்டால் அவர் வணிகம், வேலை, குடும்பம், திருமண வாழ்க்கை என அனைத்திலும் நல்ல பலன்களையும், மாற்றங்களையும் பெற்றிடுவார்.

இந்த மாதத்தில்  கடக ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிக்கின்றனர்.  மகர ராசியில் சனி வக்கரகதியில்   சஞ்சரிக்கின்றன.

மகரத்தில் உள்ள  சனி 7ம் பார்வையாக   நேரடியாக செவ்வாய் , சூரியனையும்   பார்க்கின்றன.  அதே போல் சூரியன், செவ்வாய் 7ம் பார்வையாக நேரடியாக மகரத்தில் உள்ள சனியை பார்க்கின்றன.  

பொதுவாக இரண்டு பகை கிரகங்கள் பார்த்துக் கொண்டால், பாதகம் ஏற்படும். நட்பு கிரகங்கள் இரண்டு ஒன்றையொன்று பார்த்துக் கொண்டால் சாதகமான பலன்கள் அமையும்.

சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் ஒரு ராசியில் சஞ்சரித்தாலோ பார்த்துக்கொண்டாலோ பிரச்சினைதான். அதுபோல சூரியனும் சனியும் ஒரே ராசியில் சஞ்சரித்தாலோ 7ம் பார்வையாக நேர்  எதிராக பார்த்துக்கொண்டாலோ பாதிப்புதான். 

சூரியன் சனி சேர்க்கை மற்றும் பார்வையானது சில ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் பாதிப்பை உருவாக்கும். ஜென்ம ஜாதகத்தில் சூரியன் - சனி பார்வை, சேர்க்கை உள்ளவர்கள், தொடர்ந்து ஒரு வேலையிலோ, தொழிலிலோ நீடிக்க முடியாது என்பதை அனுபவத்தில் உணரலாம்.

கடக ராசியில் ஏற்கனவே செவ்வாய் சஞ்சரிக்க அங்கே போய் இணையும் சூரியனின் நேரடியான பார்வை சனிபகவானுக்கு கிடைக்கிறது.  இந்த கிரகங்களின் சஞ்சாரமும் பார்வைகளும் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும் சிலருக்கு தீமைகளையும் தரும்.

சூரியன் சிறப்பான பலனைத் தரக்கூடிய கடகத்தில் சூரியன் இருப்பதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன் கிடைக்கும் பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.

மேஷம் 

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே..! 

ஆடி மாதம் மேஷ ராசிக்கு நிதி நிலை சிறப்பாக அமையக்கூடியதாக இருக்கும். பூர்விக சொத்துக்கள் கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது. சமூகத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். முக்கியமான முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வியாபாரம் நன்றாக லாபகரமாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். வெளிநாடு வாய்ப்புக்கள், புது வேலைக்கான முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் இந்த மாதம் நான்காவது வீட்டில் அமர்ந்து வக்ரமடைந்த சனிபகவானின் பார்வையை பெறுவதால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது அவசியம்.  பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். குழந்தைகளின் திருமண முடிவு எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை பிள்ளைகளையும் ஆலோசனை செய்வது அவசியம். 

அதே நேரத்தில் இந்த மாதம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் சனியின் பார்வையை விட்டு விலகி ஐந்தாம் வீட்டிற்கு செல்லப்போவதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.  உங்களுக்கு உடம்பில் இருந்த மந்தநிலை நீங்கும். நினைத்த காரியம் சுலபமாக முடியும். அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். 

ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் செய்யுங்கள்.


ரிஷபம் 

சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..! 

நீங்கள் எந்த துறையில் வேலை அல்லது தொழில் செய்தாலும் அதை மிகுந்த பக்தியுடன் செய்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் பணியிடத்திலிருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

சோர்வு களைப்பு நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள்.  எந்த ஒரு பெரிய பணியையும் தொடங்க விரும்பினால் அது சிறப்பாக செய்து முடிப்பதற்கான, நேரம் உங்களுக்கு முற்றிலும் சாதகமாக இருக்கும்.  அரசாங்க தொடர்பில் வெற்றி ஏற்படும். 

செவ்வாய் பகவானின் இடப்பெயர்ச்சி சாதகமாக உள்ளதால் சகோதரர்கள் இடையே இருந்த பிரச்சினை நீங்கும். சொத்து வாங்க முயற்சி செய்யலாம். பங்குச்சந்தை முதலீடுகளால் பணம் வரும். 

சூரியன் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு பயணம் செய்வதால் பேச்சில் இருந்த கடுமை நீங்கும்.   பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சூரியனுக்கு சனியின் பார்வை கிடைப்பதால் யாருக்கும் பணம் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். 

உங்கள் வேலையை முடிக்க கட்டுப்பாட்டுடன் பணிபுரிந்தால், நீங்கள் நினைத்த வெற்றியை எளிதில் அடையலாம். உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிறைந்த மாதமாக அமையும். 

மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக கண் தெரியாதவர்கள், காதுகேளாதவர்களுக்கு உதவி செய்ய நன்மைகள் அதிகம் நடைபெறும்.


மிதுனம் 

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..! 

புதன் வலிமையாக ஆட்சி பெற்று பயனம் செய்வதால் தன்னம்பிக்கை தைரியம் கூடும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். 

அஷ்டமத்து சனி கஷ்டத்தை கொடுத்தாலும் குருவின் பார்வை சாதகமாக உள்ளது. செவ்வாய் பகவானின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பண வரவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  நிதி ரீதியாக லாபத்தை தரக்கூடியதாகவும், வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 

சூரியன் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். உஷ்ண நோய்கள் நீங்கும். அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். 

சில சாதகமற்ற பலன்களைப் பெற நேரிடும். இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன் மீது சனிபகவானின் பார்வை விழுவதால் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானம் தேவை. இளைய சகோதர சகோதரிகளால் உங்களுக்கு செலவுகள் வரும்.  பேச்சில் கடுமை காட்ட வேண்டாம்.  குடும்பத்தில் சில முரண்பாடான நிகழ்வுகள் நடக்கும். அதனால் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும்.

இந்த மாதத்தில் உடல் வலிமை குறைவாக இருப்பதாக தோன்றும். . சிறிய உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவைக் எடுத்துக் கொள்வது அவசியம். மாணவர்கள் கல்வி கவனமாக செயல்படுவது அவசியம்.

உங்கள் பணிகளை மேம்படுத்துவதன் மூலமாகவும் முயற்சிகளை முன்னெடுப்பதாலும் லாபத்தைப் பெற்றிடலாம். உதவிகள் கிடைக்கும்.

புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள். மாற்றுத்திறனாளிக்கு உதவுங்கள்.


கடகம் 

சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே..! 

விரைய ஸ்தானத்தில் பயணித்த சூரியன் உங்கள் ராசிக்கு வந்துள்ளார்.  உங்கள் ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் நிகழும் இந்த காலத்தில் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். பல வழியில் நற்பலனும், லாபமும் கிடைத்தாலும், திடீர் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்களின் கெளரவம், சமூக அந்தஸ்து அதிகரிக்கும்.

ராசியில் உள்ள சூரியன் மீது சனிபகவான் பார்வை விழுவதால் பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் கோபப்படுவீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். 

ராசியில் உள்ள செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். கோர்ட் வழக்குகளில் கவனம் தேவை அலட்சியம் வேண்டாம்.  கணவன் மனைவிக்கு இடையை சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். 

கண்டகச்சனியால் ஞாபக மறதி ஏற்படும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். 

ஏழைகள், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யவும்.


சிம்மம் 

சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..! 

சிம்ம ராசிநாதன் சூரியன் விரைய ஸ்தானமான கடகத்தில் பயணம் செய்கிறார்.  அதனால் எல்லா விஷயங்களிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. சில விஷயங்களால் அலைச்சலும், செலவுகளும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து சில விரும்பத்தகாத செய்திகளை நீங்கள் பெறலாம்.

ஆறாம் வீட்டில் உள்ள சனியின் பார்வை படுவதால் அலைச்சல் டென்சன் அதிகரிக்கும். தூக்க குறைபாடு ஏற்படும். பயணங்களின் போது கவனம் இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். 

உங்களுக்கு சுக்கிரன் சாதமாக பயணம் செய்வதால் சுப செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புது வீடு சொத்து வாங்கலாம். புது தொழில் அமைய யோகம் உண்டு. விஐபிக்களால் ஆதாயம் உண்டு. பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.  புதிய வாடிக்கையாளர்களைப் பெறலாம் மற்றும் சில பயனுள்ள ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

ஞாயிறு கிழமைகளில் பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.


கன்னி 

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..! 

கன்னி ராயினருக்கு 11ம் வீடான கடகத்தில் சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.  இதனால், கன்னி ராசியினர் பல நற்பலன்களைப் பெற்றிடுவீர்கள். பண வரவாகும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். சொத்து தொடர்பான தடைகள் நீங்கும். அரசுப் பணிகளில் பெரும் லாபம் இருக்கும்.

தொட்டது துலங்கும் மாதமாக அமையும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கி உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெரிய நபர்களின் அறிமுகமும் அவர்கள் மூலம் நற்பலனும் கிடைக்கும். உங்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், அந்தஸ்தையும் நற்பெயரையும் மேம்படுத்தும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்து போடலாம். வியாபாரம் புதிதாக தொடங்கலாம். 

சனியின் பார்வையில் சூரியன் இருந்தாலும் நிதி விவகாரங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுவும் இருக்காது என்றாலும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தூக்க குறைபாடு ஏற்படும். 

செவ்வாய் 12ஆம் வீட்டில் வந்து மறைவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. அரசு தொடர்பான காரியங்கள் லாபகரமாக இருக்கும். 

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்க நன்மைகள் நடைபெறும்.


துலாம் 

சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..! 

துலாம் ராசியினர் ஆடி மாதத்தில் நற்பலன்களை அனுபவிப்பர். உங்கள் வாழ்க்கையிலும், வேலை செய்யும் துறையிலும் நிறைய மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரும். அரசு வேலை தேடுபவர்கள் வேலை கிடைப்பதற்கான நல்ல நேரமாக அமையும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். அரசியல் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு மிகவும் சாதகமான நேரம் கிடைக்கும்.

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்கிறார். சூரியன் மீது சனியின் பார்வை விழுவதால் வேலையில் கவனம் தேவை. வேலையில் கூடுதல் பொறுப்பும் சுமையும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளைப் பற்றி விமர்சித்து பேச வேண்டாம். 

செவ்வாய் சாதகமாக பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டில் இருந்து லாப ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுவதால் வீடு மனை வாங்கலாம். நிதி நெருக்கடிகள் நீங்கும் கடனை பைசல் செய்யலாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். ஷேர்மார்க்கெட் மூலம் லாபம் வரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். 

கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள். 


விருச்சிகம் 

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே..! 

விருச்சிக ராசியினருக்கு பல சுபமான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிப்பதோடு, நீங்கள் செய்ய நினைத்த திருப்பணி செய்ய வாய்ப்பு ஏற்படும்.  உங்கள் வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கும். தைரியமும் வலிமையும் அதிகரிக்கும், குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

எட்டாம் வீட்டில் பயணித்த சூரியன் 9ஆம் வீட்டிற்கு வந்துள்ளார். சூரியனுக்கு சனியின் பார்வை கிடைப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரும். 

ராசிநாதன் செவ்வாய் 10ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாவதால் சவால்களை சாதனையாக மாற்றுவீர்கள். சொத்து பாகப்பிரிவினை சாதகமாக முடியும். சகோதரன் சகோதரிகளிடைய இருந்த பிரச்சினைகள் நீங்கும். பதவிகள், பொறுப்புகள் தேடி வரும் ஆரோக்கியம் அதிகரிக்கும். அரசு தொடர்பான விசயங்களில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். ஏழை நோயாளிகளுக்கு உதவுங்கள். 


தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..! 

தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தரக்கூடிய காலமாக இருக்கும். நீங்கள் எந்த வேலை மற்றும் வணிகம் செய்பவராக இருந்தாலும், அதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கவனக்குறைவால் இழப்புகள் ஏற்படலாம். சமூகத்தில் மரியாதை மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும். ஆன்மிக நடவடிக்கைகளில் அதிக நாட்டம் இருக்கும்.

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சூரியன் மீது இரண்டாம் வீட்டில் உள்ள சனிபகவானின் பார்வை விடுவதால் பணம் விசயத்தில் கவனம் தேவை. செலவில் சிக்கனம் தேவை. 

அப்பா வழியில் திடீர் மருத்துவ செலவுகள் வரும். எட்டாம் வீட்டில் பயணித்த செவ்வாய் 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் தடைகள் விலகும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். சொத்து விசயங்களில் லாபம் அதிகரிக்கும். 

கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். அ

அரசு வழியில் நட்பு கிடைக்கும். உறவினர்களின் ஆறுதல் கிடைக்கும். வியாபாரம் இந்த மாதம் சாதகமாக உள்ளது. 

அம்மன் கோவிலுக்கு  சென்று வழிப்படுங்கள்.


மகரம் 

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே..! 

சூரியன் இந்த மாதம் முழுவதும் உங்களுடைய களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். மகர ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய மாதம். 

உங்கள் ராசியில் அமர்ந்துள்ள ராசிநாதன் சனிபகவானின் பார்வை நேர் எதிரே உள்ள சூரியன் மீது விழுகிறது. திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பிரிவினை உண்டாக்கும் பிரச்னைகள் ஏற்படும்.  உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெற்றோர்களின் சொல்பேச்சு கேட்டு நடப்பது நல்லது.

பண வரவு சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. அரசு தொடர்பான காரியங்களில் கவனம். பயணங்களின் போது கவனம் தேவை. சொத்து விற்பனை, பாகப்பிரிவினையில் கவனம் தேவை.  உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. குழந்தைகள் உயர்கல்வி, திருமணம் விசயமாக பேசும் பொது கவனம் தேவை. 

வர்த்தகர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

குல தெய்வ வழிபாடு மனதில் நிம்மதி சந்தோஷத்தை கொடுக்கும்.  ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும். 


கும்பம்
 

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..! 

கும்ப ராசியினர் உங்கள் செயல்களில் வெற்றியைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருந்த சூரியன் ஆறாவது வீட்டில் பயணம் செய்வதால் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் 

ராசிக்கு 6ல் சூரியன் இருப்பதால் திருமண வாழ்க்கை, கூட்டு தொழிலில் சிறிய பிரச்னைகள் ஏற்படும். உங்கள் மனைவி நோய்வாய்ப்படக்கூடும் என்பதால், இந்த காலம் உங்கள் திருமண வாழ்க்கையில் இன்பம் இருக்காது. வணிகத்தில் சில சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் அல்லது உங்கள் சக ஊழியர்களுடன் மோதல்கள் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம் இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். 

செவ்வாய் பயணம் சாதகமாக உள்ளதால் வீடு மனை வாங்குவது விஷயமாக பேசுவது சாதகமாக இருக்கும். ஏழாம் வீட்டிற்கு வந்து அமரும் செவ்வாயின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.   தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சாதகமாக இருக்கும். வேலைச்சுமை நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். 

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடுவது மன நிம்மதியைக் கொடுக்கும். 


மீனம் 

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே..! 

சூரியனின் நகர்வு மீன ராசிக்கு நல்ல பலனைத் தருவதாக இருக்கும். இந்த நேரத்தில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நேரம் சாதகமானதாக இருக்கும். கடினமாக உழைப்பதன் மூலம், உங்கள் வேலையில் நீங்கள் நிச்சயமாக முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். மனைவியுடன் மகிழ்ச்சியான நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

இதுநாள் வரை நான்காம் வீட்டில் இருந்த சூரியன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 

சனியின் பார்வை கிடைப்பதால் கர்ப்பிணி பெண்கள் அதிக கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உடல் ரீதியாக உங்களுக்கு சில தொந்தரவுகள் ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகளும் வரும் 

செவ்வாய் பகவான் இடப்பெயர்ச்சி சாதகமாக இருப்பதால் எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றியடைவீர்கள். பிள்ளைகளின் கல்வி விசயமாக சுப செலவுகள் ஏற்படும். உங்களுக்கு வெற்றி அதிகரிக்க தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.




No comments

Thank you for your comments