கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி
ஈரோடு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுய உதவுக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுகழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவுக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
திட்டம் 1-ன் கீழ்பெற பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/- மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.
திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக கடனாக ரூ.20,00,000/-மும்,
திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ / மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 5-வது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி / நகர கூட்டுறவு வங்கிகள்/ தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆணவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விகடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது /சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பித்து விண்ணப்பிக்கலாம்.
எனவே, மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையின மக்களும் கடனுதவி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு.
There is no for vellore sir
ReplyDelete