Breaking News

எந்த கடைகளில் குட்கா விற்கப்பட்டாலும் உடனே சீல் வைக்க வேண்டும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை:

நாளை முதல் தமிழகத்தின் அனைத்து கடைகளையும் சோதனை செய்ய வேண்டும். எந்த கடைகளில் குட்கா, பான் பராக் போன்ற உயிர்கொல்லி போதை பொருள் விற்கப்படுகிறதோ, அதற்கு உடனே சீல் வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (22-7-2021) எச்சரித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற மாநில அளவிலான புகையிலை தடுப்பு நடவடிக்கைகளுக்கான கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. 

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு கழகம், காவல் துறை மற்றும் உள்ளாட்சி துறைகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.  குட்கா, பான் பராக் போன்ற உயிர்கொல்லி போதை பொருட்களின் மீதான  தடையை கடுமையாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் புகையிலை, குட்கா இல்லாத மாநிலமாக உருவாக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  புகையிலை இல்லா மாநிலம் தமிழ்நாடு என்று உருவாக நாம் ஒன்றிணைவது அவசியம்.

தமிழ்நாட்டிலுள்ள எந்த கடைகளிலும் தடைச்செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல் முறை நோட்டீஸ், இரண்டாவது முறை அபராதம், அடுத்ததாக சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வியாபாரிகளை மாவட்டம் தோறும் ஒன்றிணைத்து உறுதிமொழியை எடுக்க வைக்கவேண்டும்.  

மாணவர்கள் மத்தியில் அதிகப் புழக்கம் இருப்பதால் கல்லூரி மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஆங்காங்கே மாவட்டத்திற்கு 50 இடங்களில் நிரந்தரமாக வைக்க நடவடிக்கைகள். மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்களில் புகையிலை தொடர்பான நிறுவனங்களின் பெயர் இருந்தால் அதை தவிர்த்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற வழிவகைச் செய்யப்படும்.

இரண்டு மாதங்களில் புகையிலை குட்கா பொருட்களை கட்டுப்படுத்த முழு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  புகையிலை ஒழிப்பு தினத்தன்று முழுமையாக புகையிலை ஒழிப்பு செய்த மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மூலமாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

புகையிலை பொருள்களை இரயிலில் எடுத்து வந்ததாலும் தெரிய வரும் பட்சத்தில் புகார் அளிப்பவர்கள் விபரம் வெளியே தெரிவிக்கப்படாது.  94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் அனுப்பலாம். புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மட்டுமல்லாமல், எங்கிருந்து வருகிறது என தெரியும் பட்சத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியில் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments