Breaking News

திணறும் அதிமுக...! உள்ளாட்சி தேர்தலில் 5 மாநகராட்சிகளை கைபற்ற பாஜக திட்டம்...!!

சென்னை: 

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம், பாஜக முக்கிய மாநகராட்சிகளை கேட்டு பெற பல்வேறு வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து வழிநடத்தி வருகிறார்கள்.  பொதுச்செயலாளர் பதவி அகற்றப்பட்டு ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து வருகிறது.  கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.   நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. சட்டசபை தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வை மீண்டும் கைப்பற்றப் போவதாக சசிகலா பேசி வருவது சர்ச்சையை உருவாக்கி வருகிறது. இதுதவிர அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் சோதனை, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை அ.தி.மு.க.வுக்கு கடும் சவாலாக எழுந்துள்ளன. இந்த பிரச்சனைகளை கையாள்வதில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் தொடர்ந்து இருந்து வருகிறது... 



நீண்ட காலத்திற்கு பிறகு நடக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜக கணிசமான மாநகராட்சிகளை கேட்டு பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் ஆவடி, கோவை, ஓசூர், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், சென்னை, திண்டுக்கல், நாகர்கோவில், தஞ்சை, ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் குறைந்தபட்சம் 5 மாநகராட்சிகளையாவது பாஜக கேட்டு பெறும் என தெரிகிறது.

அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்ததால்தான் பாஜகவுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்பது எதார்த்தம்.  குறிப்பாக அதிமுக வலுவாக உள்ள மேற்கு மண்டலத்தில் பாஜகவுக்கும் செல்வாக்கு கூடியிருக்கிறது.   இதனால் கோவை, சேலம், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நாகர்கோவில், சென்னை ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிட பாஜக விரும்பும் என்று தெரிகிறது.


கடந்த 26.07.2021ம் தேதி அன்று  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை  சந்தித்து பேசினர். அப்போது அதிமுகவை கைப்பற்றத் துடிக்கும் சசிகலாவின் செயல்பாடுகள், அதிமுக உள்கட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்ற மேல்-சபைக்கான 3 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராகி  இருக்கும் எல்.முருகன் அடுத்த 6 மாதங்களுக்குள் எம்.பி.ஆக வேண்டும். இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


பிரதமரை சந்தித்து பேசிய பிறகு அடுத்த நாள் 27.07.2021ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.

ஒரு வேளை சசிகலா அதிமுகவை கைப்பற்றினால், நிச்சயம் அவர் ஜெயலலிதா பாணியையே பின்பற்றுவார். அப்போது கட்சியில் அவர் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடும். இந்த பிரச்சினை உள்ளிட்ட சில முக்கிய விவகாரங்களை தீர்க்க பாஜகவின் தயவு அதிமுகவுக்கு தேவை.  

எனவே அவர்கள் கேட்கும் மாநகராட்சிகளை அவர்களுக்கு ஒதுக்குவதை தவிர வேறு வழியே இல்லை என்கிறார் அரசியல் பார்வையாளர்கள். அந்த வகையில் தாங்கள் விரும்பும் மேயர் இடங்களை பாஜக கேட்டுப் பெறும் என்றும் தெரிகிறது.


தமிகத்தில் தாமரை மலரவைத்தே தீரவேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதற்கான அனைத்து வேலைகளையும் திறம்பட தீர்க்கமாக செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக  மாநகராட்சிகளை அதிமுகவிடம் கேட்டுபெறுவார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்... 


No comments

Thank you for your comments