Breaking News

ரூ.28,508 கோடியில் 49 தொழில் திட்டங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து


சென்னை:

தமிழ்நாடு தொழில்துறை சார்பில் இன்று (20-7-2021) நடைபெற்ற "முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு" விழாவில் 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகிட வகை செய்யும் ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. 

சென்னை கிண்டியில் ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இன்று (20.7.2021) காலை 11 மணியளவில் தொழில் துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு என்ற மாபெரும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் பங் கேற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களாக, 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 35 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 21,630 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் 7,117 கோடி ரூபாய் முதலீட்டில் 6,798 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் துவக்கிவைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


மேற்கூறிய 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகிட வகை செய்யப்பட்டுள்ளது.  

மேலும் இந்நிகழ்ச்சியின் போது, முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர் இணையதளம் 2.0-ஐ துவக்கி வைத்தார்கள். தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், வணிகம் புரிதலுக்குத் தேவையான நூறு சேவைகள் இந்த இணையதளத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை (Start ups) ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் (ATEA) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.  இந்த Digital Accelarator திட்டம் மூலம், தமிழ்நாட்டில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகப் புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மானியத்திற்காக ஏறக்குறைய 75 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதற்கட்டமாக 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான அனுமதி உத்தரவுகளை,  தமிழ்நாடு முதலமைச்சர் பின்வரும் நிறுவனங்களுக்கு வழங்கினார்கள்:

மேலும், உயர்தர உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் உள்ள தொழிலகங்களுக்கான விமானம் மற்றும் விமான இயந்திர பாகங்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, General Electric நிறுவனம் ஒரு திறன்மிகு மையம் (Centre of Excellence) அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் டிட்கோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த முதலீடுகள், மின் ஆலைகள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பச் சேவைகள், பொது உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், காலணிகள், மருத்துவப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட பின்வரும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடிக்கல் நாட்டுதல்:

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.4,250 கோடி முதலீட்டில் 21,630 பேருக்கு வேலைவாய்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அவை வருமாறு:-

1. காஞ்சிபுரம் வல்லம் வடகாலில் ரூ.1,700 கோடியில் ஏ.ஜி.அண்டு மிரதாம் நிறுவனம் அமைக்கும் ரசாயன தொழிற்சாலை.

2. சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.876 கோடியில் டி.சி.எஸ். பேஸ்-2 தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.

3. வாலாஜாபாத்தில் ரூ.621 கோடி முதலீட்டில் காற்று விசையாளிகளுக்கான கியர்பெட்டிகள் தயாரிக்கும் காற்றாலை கம்பெனி.

4. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.125 கோடியில் சூப்பர் ஆட்டோ போர்ச் நிறுவனம் அமைக்கும் எந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

5. ஸ்ரீபெரும்புதூரில் ரூ.320 கோடி முதலீட்டில் குரித் இந்தியா தனியார் கம்பெனி அமைக்கும் காற்றாலை உதிரிபாக தொழிற்சாலை.

6. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.200 கோடியில் லிவியா பாலிமர் கம்பெனி அமைக்கும் பாலிமர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

7. ஓசூரில் ரூ.150 கோடி முதலீட்டில் ஐநாக்ஸ் ஏர் தனியார் கம்பெனி தயாரிக்கும் திரவ மருத்துவ ஆக்சிஜன் தொழிற்சாலை.

8. ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ரூ.138 கோடியில் மருத்துவ கையுறைகள் தயாரிக்கும் கம்பெனி.

9. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.120 கூபிக் மாடுலர் சிஸ்டம் நிறுவனத்தின் மின்சார இணைப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை.

இந்த தொழிற்சாலைகள் மூலம் 21,630 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

புதிய திட்டங்களைத் துவைக்கி வைத்தல்

மேலும், இந்த நிகழ்ச்சியில் ரூ.7,117 கோடி முதலீட்டில் 6,718 பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 5 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த திட்டங்கள் வருமாறு:-

1. ஒரகடத்தில் 4,738 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.5,317 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் சூரியன் மின்கலன் தொழிற்சாலை.

2. திருவள்ளூவர் மாவட்டத்தில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.1 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட சென்னை பிசினஸ் தொழில்பூங்கா.

3. ஸ்ரீபெரும்புதூர்- ஒரகடத்தில் 60 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டிலான சிங்கப்பூர் கம்பெனியின் தொழில் பூங்கா.

4. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.200 கோடி முதலீட்டில் அமைந்துள்ள கோரல் காற்றாலை மின்சக்தி தொழிற்சாலை.

5. மறைமலைநகர் மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.100 கோடியில் அமைந்துள்ள டென்மார்க் நாட்டு கம்பெனியின் தானியங்கி உதிரிபாக தொழிற்சாலை.


இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், தொழில் துறை சிறப்புச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி , ASSOCHAM தமிழ்நாடு தலைவர் காரி அலெக்சாண்டர் சிடல், Cil தென் மண்டல தலைவர் சி.கே. ரங்கநாதன், TCS Chief Operating Officer என். கணபதி சுப்பிரமணியம், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments