ரியல் ஹீரோவாக இருங்கள்... நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை:
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக்கு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்றம், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நாடாளும் அளவிற்கு நடிகர்கள் வளர்ந்துள்ள தமிழ்நாட்டில், கதாநாயகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை இறக்குமதி செய்துள்ளார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்தும் நுழைவு வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்யாததால் அதனை பயன்படுத்த முடியவில்லை என்றும், நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதிக்குமாறும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிட வில்லை என்றும், வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் மனுதாரர் நடிகர் என்பதைத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும் நீதிபதி குறிப்பிட்டார். வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் தனது உத்தரவில் நீதிபதி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசின் நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும், தமிழ்நாட்டில் நாடாளும் அளவிற்கு நடிகர்கள் வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்புச் செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான நுழைவு வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டார்.
மேலும், நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments
Thank you for your comments